விளையாட்டு

“என் அப்பாவின் ஒழுக்கம் எனக்குள் ஒட்டிக் கொண்டது” - தோனி பகிர்வு

செய்திப்பிரிவு

“என் அப்பாவின் ஒழுக்கம் எனக்குள் அப்படியே ஒட்டிக் கொண்டது. அதனால் பள்ளிக்கு நான் ஒருபோதும் லேட்டாக சென்றது கிடையாது. அது மாதிரியான சிறு சிறு பழக்கவழக்கங்கள் வாழ்வில் முக்கியமானது” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

தனியார் பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்த மாணவர் சந்திப்பு கூட்டத்தில் தோனி இதை பகிர்ந்துள்ளார். அதில் தனது விளையாட்டு கேரியர் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

“விளையாட்டு ஒரு கேரியர் ஆப்ஷனாக பார்க்கப்படாத தலைமுறையை சேர்ந்தவன் நான் என்று நம்புகிறேன். அப்போதெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்கள் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தி, வேலை பெற்று, நிலையான வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டுமென விரும்பினார்கள். விளையாட்டு ஒருபோதும் கேரியர் ஆப்ஷனாக பார்க்காத காலம் அது.

ஆனால், அந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி என நினைக்கிறேன். எனது வெற்றியில் எனது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பங்கும் முக்கியமானது. எனது பயிற்சியாளர்கள், நண்பர்கள் ஆகியோரது பங்கும் முக்கியமானது. குறிப்பாக எனது அப்பாவின் பங்கு மிக முக்கியமானது. அவர் மிகவும் ஒழுக்கமானவர். அது எனக்குள் அப்படியே ஒட்டிக் கொண்டது. அதனால் எனது நர்சரி முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிக்கு ஒருநாளும் நான் லேட்டாக சென்றது கிடையாது. வாழ்வில் இது மாதிரியான சிறு சிறு பழக்கவழக்கங்கள் முக்கியமானது.

சரியான வழிகாட்டுதல், அர்ப்பணிப்பு இருந்தால் எல்லோராலும் தங்கள் இலக்குகளை எட்டி சாதிக்க முடியும்” என இந்த நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் தோனி உத்வேகமாக பேசினார். இதில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் தோனி பதில் அளித்தார்.

தோனியின் பயோபிக் படத்தில் “சார், நான் என்ன செஞ்சிட்டு இருக்கேன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். ஆனா, இங்க இருந்து நான் எப்படி முன்னேறி போறதுன்னு எனக்கு தெரியல. தினமும் என் லைஃப்ல என்ன நடக்குதுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். வாழ்க்கை இப்படியே போயிடுமா சார்? அப்பப்ப எல்லாத்தையும் விட்டுட்டு திரும்ப போயிடலாம்னு கூட யோசிக்க தோணும். ஆனா அப்பாவோட முகம் என் கண்ணு முன்னாடி வருது. நான் விளையாடமாலே தோத்து போயிட்டு இருக்கேன் சார்” என்ற வசனம் வரும். இந்த வசனத்தை படத்தில் தோனியாக நடித்த மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் சொல்வார். அந்த காட்சி கரக்பூர் ரயில் நிலையத்தில் தோனி டிக்கெட் பரிசோதகராக பணியாற்றிய போது அவரது உணர்வின் வெளிப்பாடாக அமைந்தது. அதன் பிறகு தான் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார் தோனி.

எதிர்வரும் ஐபிஎல் சீசனில் விளையாட தற்போது தோனி தயாராகி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மஞ்சள் ஜெர்சியில் களம் காண உள்ள அவரை காண அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்துள்ளனர்.

SCROLL FOR NEXT