சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று (29-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் மோதுகின்றன.
சென்னையின் எஃப்சி அணி 18 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 டிரா, 10 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி 18 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 டிரா, 9 தோல்விகளுடன் 21 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. டிஜி புருஷோத்தமன் பயிற்சியாளராக உள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி, இந்த சீசனில் கடந்த நவம்பர் 24-ம் தேதி தனது சொந்த மண்ணில் சென்னையின் எஃப்சி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. அதேபோன்ற செயல்திறனை மீண்டும் வெளிப்படுத்துவதில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி கவனம் செலுத்தக்கூடும்.
இருப்பினும் சென்னையின் எஃப்சி அணி இதுவரை ஐஎஸ்எல் வரலாற்றில் தனது சொந்த மண்ணில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியிடம் இதுவரை தோல்வி அடைந்தது கிடையாது. சென்னையில் கேரளா அணிக்கு எதிராக 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னையின் எஃப்சி அணி 5 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. 4 ஆட்டங்களை டிரா செய்துள்ளது.
கடந்த சீசனில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் நடைபெற்ற ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணி வெற்றி பெற்றதும் இதில் அடங்கும். இம்முறையும் சென்னையின் எஃப்சி அணி கிளீன்ஷீட் செய்தால், கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சிக்கு எதிராக மெரினா மச்சான்ஸ் முதல் முறையாக சொந்த மண்ணில் அடுத்தடுத்து ஷட்அவுட்களை பதிவு செய்யும்.
சென்னையின் எஃப்சி அணி இந்த சீசனில் கடைசியாக விளையாடி 5 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்யவில்லை. 3 ஆட்டங்களை டிரா செய்துள்ள அந்த அணி, 2 தோல்வியை பெற்றுள்ளது. அதேவேளையில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு டிராவை பதிவு செய்துள்ளது. இந்த இரு அணிகளுக்கும் தலா 6 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தி புள்ளிகளை குவித்தால் மட்டுமே முதல் 6 இடங்களுக்குள் நுழைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற முடியும்.
ஐஎஸ்எல் தொடரில் இவ்விரு அணிகளும் 23 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, இதில் சென்னையின் எஃப்சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் தலா 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. 9 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன.