விளையாட்டு

ரவி சாஸ்திரி நியமனம் விரிசலை மறைக்கும் வேலைதான்: கீர்த்தி ஆசாத் சாடல்

செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டதையடுத்து முன்னாள் ஆல்ரவுண்டரும் தற்போதைய பாஜக எம்.பி.யுமான கீரித்தி ஆசாத் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ரவி சாஸ்திரி நியமனம் குறித்து அவர் கூறும்போது, “விரிசலை மறைக்கச் செய்யும் வேலைதான் இது. பிரச்சினைகளுக்கு நிரந்தரமாகத் தீர்வு காணும் முயற்சி அல்ல” என்று சாடியுள்ளார்.

இந்திய அணியின் தோல்விகள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆட்டத்தின் மீதான விருப்பத்தையும் நாட்டிற்காக ஆடுகிறோம் என்ற கடமையுணர்வையும் வீரர்கள் இழந்து விட்டனர் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இதே வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் தங்கள் அணி உரிமையாளர்களுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள்தான். ஆனால் நாட்டிற்காக ஆடும் போது அவர்களது விருப்பமின்மையும் உறுதியின்மையும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது” என்றார்.

கீர்த்தி ஆசாத் அதிரடி ஆட்டத்திற்குப் பெயர் பெற்றவர். 1983 உலகக் கோப்பையை வென்ற போது இந்திய அணியில் விளையாடியவர். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இவரது பந்து வீச்சு இந்திய வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது. இவர் மிகவும் சிக்கனமாக தனது ஆஃப் ஸ்பின்னர்களை அந்தப் போட்டியில் வீசினார்.

தோனியைக் குறை கூறுவது பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த கீர்த்தி ஆசாத் “தோனியை அகற்ற வேண்டும் என்ற கூச்சலை நான் ஏற்கவில்லை. அவர் நாட்டின் கிரிக்கெட்டிற்கு செய்துள்ள பங்களிப்பை கருத்தில் கொண்டு முடிவை அவரிடமே விட்டுவிட வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT