விளையாட்டு

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில், தமிழக வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் மீதான தாக்குதலுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடந்தது என்ன? - 2024-2025 ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்களுக்கான கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 4 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இன்று நடந்த காலிறுதிப் போட்டியில், தமிழகத்தின் அன்னை தெரசா பல்கலைக்கழகத்துக்கும், பிஹார் மாநிலம் தர்பாங்கா பல்கலைக்கழகத்துக்கும் இடையே நடைபெற்றது.

இந்தப் போட்டியின் போது எதிரணி வீராங்கனைகள் ஃபவுல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், தமிழக வீராங்கனைகள் நடுவரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், நடுவர் தமிழக வீராங்கனைகளையும், பயிற்சியாளரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு கைக்கலப்பு ஏற்பட்டு, பயிற்சியாளரை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.இதைத்தொடர்ந்து அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டி.ஜெயக்குமார் (அதிமுக) - “கோப்பையை வாங்கி வந்த பிறகு கோடிகளை கொடுப்பதை விட,விளையாடும் வீரர்களுக்கு அளிக்கும் பாதுக்காப்பு கோடிகளை விட பெரியது. பிஹார் மாநில வீரர்கள் - பஞ்சாப் மாநில பார்வையாளர்கள் என இருவரும் இணைந்து தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதையும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் சாதனைகளில் ஒன்றாக எடுத்துக் கொள்ள போகிறாரா? அடுத்த மாநிலத்துக்கு செல்லும் வீரர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மறுத்துவிட்டதா விளையாட்டுத் துறை?” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் (பாமக) - “பிஹாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியுடன் இன்று நடைபெற்ற போட்டியின் போது, பிஹாரின் வீராங்கனைகளின் விதிமீறல்கள் குறித்து புகார் செய்ததால், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. பஞ்சாப் மாநில அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தமிழக வீராங்கனைகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதேபோல், தமிழக பயிற்சியாளர் மீதான வழக்கை திரும்பப் பெறச் செய்வதுடன், பிஹாரின் அணியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் (அமமுக) - “உரிய விதிமுறைகளை பின்பற்றி கபடி போட்டியை நடத்த வேண்டிய நடுவர்களே விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதோடு, அதனை சுட்டிக்காட்டிய தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, பஞ்சாப் மாநில அரசை தொடர்பு கொண்டு தமிழக கபடி வீராங்கனைகளை தாக்கிய நடுவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பயிற்சியாளரையும், வீராங்கனைகளையும் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன் (தமாகா) - “பஞ்சாப்பில் விளையாட்டின் போது உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படாதது முறையல்ல.எனவே தற்போது பஞ்சாப்பில் தாக்கப்பட்ட தமிழக வீராங்கனைகளுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்.இதற்காக மத்திய மாநில அரசுகள் பிற மாநிலங்களில் சென்று விளையாடும் வீரர் வீராங்கனைகளுக்கு உரிய பாதுகாப்பு இருக்க வேண்டும் என்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT