விளையாட்டு

இலங்கையை வீழ்த்திய இந்தியா: U-19 மகளிர் T20 World Cup ‘சூப்பர் 6’ சுற்றுக்கு முன்னேற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு ஐசிசி யு19 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டியில் இலங்கையை 60 ரன்களில் வீழ்த்தியது இந்தியா. இப்போது அடுத்த சுற்றான ‘சூப்பர் 6’ சுற்றுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசிய நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்தியா பங்கேற்றுள்ளது. மொத்தம் 16 அணிகள் இதில் விளையாடுகின்றன. 41 போட்டிகள். 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிந்து முதல் சுற்றில் விளையாடுகின்றன. தொடர்ந்து ‘சூப்பர் 6’ சுற்று நடைபெறுகிறது. இதில் குரூப் சுற்றில் முதல் மூன்று இடங்களை பிடிக்கின்ற அணிகள் இரு பிரிவுகளாக பிரிந்து விளையாடும். பின்னர் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி நடைபெறுகிறது.

குரூப்-ஏ பிரிவில் உள்ள இந்திய அணி, ஏற்கெனவே முதல் சுற்றில் மேற்கு இந்தியத் தீவுகள், மலேசியா அணியை வீழ்த்தியது. இந்நிலையில், வியாழக்கிழமை அன்று இலங்கை அணியுடன் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் இந்தியா விளையாடியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. கோங்கடி த்ரிஷா 44 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை விரட்டியது. இருப்பினும் அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது.

10 ஓவர்கள் முடிவில் 39 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்களை எடுத்தது. அதன் மூலம் இந்தியா 60 ரன்களில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் பந்து வீசிய ஷப்னம், ஜோஷிதா, சிசோடியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். ஆயுஷி மற்றும் வைஷ்ணவி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இலங்கை வீராங்கனை மனுதி ரன் அவுட் ஆனார். இந்த போட்டியில் பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை கோங்கடி த்ரிஷா பெற்றார்.

சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறிய உள்ள இந்திய அணி குரூப் 1-ல் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், ஸ்காட்லாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் உள்ளன. வரும் 26-ம் தேதி வங்கதேச அணியின் இந்த சுற்றில் இந்தியா விளையாட உள்ளது.

SCROLL FOR NEXT