ஷாகிப் அல் ஹசன் 
விளையாட்டு

ஷாகிப் அல் ஹசனுக்கு சிக்கல்: கைது வாரண்ட் பிறப்பிப்பு!

ஆர்.முத்துக்குமார்

வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் சில காலமாகவே கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கி திக்கு முக்காடி வருகிறார். அவர் வங்கதேசத்தில் நுழைந்தால் மக்கள் சும்மா விட மாட்டார்கள் என்ற அச்சுறுத்தல் ஒருபுறம் இருக்க இப்போது வங்கதேச நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஆனால், இந்தப் பிடிவாரண்ட், பொருளாதாரக் குற்றத்துக்கானது. அதாவது ரூ.3 லட்சம் மதிப்பிலான காசோலைகள் இதுவரை பவுன்ஸ் ஆகியுள்ளதாக வங்கதேச கோர்ட் ஷாகிப் அல் ஹசனுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.எஃப்.ஐ.சி வங்கி மேலாளர் முகமது ஷஹிபுர் ரஹ்மான் கூறும்போது, “நீதிமன்றம் அவருக்கு சம்மன்களை அனுப்பியது. ஆனால், ஷாகிப் வரவில்லை. இதையடுத்து வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கட்சியில் அவைக்குத் தேர்ந்தேடுக்கப்பட்டவர் மக்கள் பிரதிநிதி ஷாகிப் அல் ஹசன். மாணவர் புரட்சியில் ஷேக் ஹசீனா தப்பி இந்தியாவுக்கு வந்து விட்டார். ஷேக் ஹசீனா மீதான மக்கள் கோபம் ஷாகிப் அல் ஹசன் மீதும் பாய்ந்தது. கொலைக் குற்றச்சாட்டுகளைச் சுமந்திருக்கும் ஹசீனா கட்சியைச் சேர்ந்தவர்களில் ஷாகிப் அல் ஹசனும் ஒருவர்.

ஹசீனா அரசு தூக்கி எறியப்பட்ட போது கனடாவில் டி20 ஆடிக்கொண்டிருந்த ஷாகிப் அல் ஹசன், அது முதல் இன்னும் வங்கதேசத்திற்கு திரும்ப முடியவில்லை.

71 டெஸ்ட் போட்டிகள், 247 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 129 டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடி ஷாகிப் 712 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இப்போது ஷாகிப் அல் ஹசன் வங்கதேசத்தின் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம்பெறவில்லை.

சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT