கோலாலம்பூர்: 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது.
இந்த உலகக் கோப்பை போட்டி மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 13.2 ஓவர்களில் 44 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் பருணிகா சிசோடியா 3, ஆயுஷி சுக்லா, ஜோஷிதா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் விளையாடிய இந்திய மகளிர் அணி 4.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோங்கடி திரிஷா 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் கமாலினி 16 ரன்களும், சானிகா சால்கே 18 ரன்களும் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். ஆட்டநாயகியாக வி.ஜே.ஜோஷிதா தேர்வு செய்யப்பட்டார்.