ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் இன்று 4வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் நேற்று வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கலந்து கொண்டு கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
ஜடேஜா ஆண்டர்சன் விவகாரத்தை விடுத்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதவாது:
”எனக்குக் குடிக்கும் பழக்கம் இல்லை. எனவே எனக்கு ஹேங் ஓவர் ஏற்படுவதில்லை, அதுபோலவே சமுதாய வாழ்வில் விஷயங்களை எதிர்கொள்ளும்போது ஒரு விஷயத்திற்குள் மற்றதை இழுத்துக் குழப்பிக்கொள்வதும் இல்லை.
என்ன நடந்ததோ அல்லது என்ன நடக்கப்போகிறதோ என்பதைப் பொருட்படுத்துவதில்லை, கடைசி டெஸ்ட் போட்டியில் கூட நாங்கள் சர்ச்சையையும் கிரிக்கெட் ஆட்டத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை, கிரிக்கெட்டில்தான் கவனம் செலுத்தினோம்.
இந்திய கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக ஆகிவிட்ட பிறகு கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவது என்பதை ஒருவர் கற்றுக் கொள்வது நல்லது. கிரிக்கெட்டைச் சுற்றி நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, ஆனால் கிரிக்கெட் ஆட்டம் அவற்றைப் பொருட்படுத்தாது ஆட்டத்தில் கவனம் செலுத்துவதை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.
ஆனால் ஒரு விஷயத்தை உணர்வது முக்கியமானது, கிரிக்கெட் ஆட்டத்தில் பலமான குணச்சித்திரங்கள் கொண்ட வீரர்கள் உள்ளனர். அந்த அணியா, நம் அணியா, இவரா, அவரா என்றெல்லாம் நான் குறிப்பிட்டுக் கூறவிரும்பவில்லை.
இவர்கள் கிரிக்கெட்டை ஆக்ரோஷமாக விளையாடுபவர்கள். ஆனால் இவர்கள் நடத்தை எல்லை மீறும்போது நடுவர் குறுக்கிட்டு அவருக்கு விதிமுறைகளை அறிவுறுத்த வேண்டும். அவர் எப்படிப்பட்ட வீரராக இருந்தாலும் சரி.
கடந்த 6 அல்லது 7 தினங்களாக இந்த விவகாரத்தை விடுத்து நன்றாகப் பயிற்சி செய்துள்ளோம், டெஸ்ட் போட்டிக்குத் தயாராக இருக்கிறோம்”
என்று மிகவும் அமைதியாகக் கூறினார் இந்திய கேப்டன் தோனி.