பெங்களூரு: காயம் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மகளிர் அணியிலிருந்து முன்னணி வீராங்கனை சோபி மோலினக்ஸ் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வீராங்கனை சார்லி டீன் அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஐபிஎல் பாணியில் நடத்தப்படும் 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக வீராங்கனைகள் ஏலம் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில், ஆஸ்திரேலியாவின் முன்னணி வீராங்கனையான சோபி மோலினக்ஸ் இடம்பிடித்திருந்தார்.
இந்நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆல்- ரவுண்டர் சோபி மோலினக்ஸ் அணியிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் ஆர்சிபி மகளிர் அணியில் அவருக்குப் பதிலாக இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சார்லி டீன் அணியில் இடம் பிடித்துள்ளார்.
சார்லி டீன், இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவர் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 36 சர்வதேச டி20 போட்டி, 3 டெஸ்ட், 39 ஒருநாள் போட்டிகளில் விளைடியுள்ளார். ரூ.30 லட்சம் விலையில் அவர் அணியில் இணைந்துள்ளார்.