விளையாட்டு

இலங்கை டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு: ஸ்மித் கேப்டன்

செய்திப்பிரிவு

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடருக்கான அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இரு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. இந்த இரண்டு போட்டிகளும் கல்லே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த சூழலில் டெஸ்ட் தொடருக்கான அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இதில் விளையாடாத காரணத்தால் அவருக்கு பதிலாக அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துகிறார்.

இலங்கையில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அதற்கு ஏற்ற வகையில் அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. இதில் மொத்தம் 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.

“இலங்கை சுற்றுப்பயணம் சவாலானது. அதை கருத்தில் கொண்டு அங்கு நிலவும் சூழலுக்கு ஏற்ப அணியை அறிவித்துள்ளோம். போட்டிக்கு முன்னதாக கள சூழலுக்கு ஏற்ப ஆடும் லெவனை அறிவிக்கும் வகையில் இந்த அணி உள்ளது” என ஆஸ்திரேலிய அணியின் தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், ஒரே ஒரு ஒருநாள் போட்டியிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29-ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் பிப்ரவரி 6 அன்றும், ஒருநாள் போட்டி பிப்ரவரி 13 அன்றும் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), அபாட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, டிராவிஸ் ஹெட், ஜாஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மாட் குஹ்னெமன், மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்பி, மிட்செல் ஸ்டார்க், வெப்ஸ்டர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT