யூனிஸ் கான் 
விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கன் அணி ஆலோசகராக யூனிஸ் கான் நியமனம்!

செய்திப்பிரிவு

காபூல்: எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.

பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டில் இந்த தொடர் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி பங்கேற்று விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது. தலா 4 அணிகள் வீதம் இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு குரூப் சுற்று போட்டிகள் நடைபெறுகிறது. குரூப் ‘ஏ’-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் வங்கதேசம் இடம்பெற்றுள்ளது. குரூப் ‘பி’-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி மற்றும் லாகூரில் நடைபெறுகிறது. இந்த சூழலில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கானை தங்கள் அணியின் ஆலோசகராக ஆப்கன் கிரிக்கெட் நிர்வாகம் நியமித்துள்ளது. இதற்கு முன்பும் தொடரை நடத்தும் நாடுகளை சேர்ந்த முன்னாள் வீரர்களை தங்கள் அணியின் ஆலோசகராக ஆப்கன் நியமித்தது உண்டு. ஒருநாள் உலகக் கோப்பை தொடர் 2023-ல் இந்தியாவின் அஜய் ஜடேஜா, டி20 உலகக் கோப்பை 2024-ல் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த பிராவோ ஆகியோர் செயல்பட்டனர். அது அவர்களுக்கு பலன் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த இரண்டு தொடர்களிலும் அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.

“சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறுவதால் அந்த நாட்டை சேர்ந்த திறன் கொண்ட வீரரை ஆலோசகராக நியமிக்க முடிவு செய்தோம். இதற்கு முன்பும் தொடரை நடத்தும் நாட்டினை சேர்ந்த முன்னாள் வீரர் நாங்கள் ஆலோசகர் நியமித்தது உண்டு. அந்த அனுபவத்தின் அடிப்படையில் கள சூழலை கருத்தில் கொண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு யூனிஸ் கானை ஆலோசகராக நியமித்துள்ளோம். அவரது பணி சிறக்க எங்களது வாழ்த்துகள்” என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நசீப் கான் தெரிவித்துள்ளார்.

யூனிஸ் கான்: 47 வயதான யூனிஸ் கான், கடந்த 2000 முதல் 2017 வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியவர். 118 டெஸ்ட் போட்டிகள் , 265 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடி ஒட்டுமொத்தமாக 17790 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் ஆலோசகராக சில காலம் செயல்பட்ட அனுபவம் கொண்டவர்.

SCROLL FOR NEXT