விளையாட்டு

ரஷீத் கான் மேஜிக்; ஆஸி.க்குப் பிறகு இவங்கதான்: ஆப்கன் அணியின் புதிய சாதனை!

ஆர்.முத்துக்குமார்

ரஷீத் கானின் வாழ்நாள் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சில் 7 விக்கெட்டுகளை 66 ரன்களுக்குக் கைப்பற்ற ஜிம்பாப்வே அணி 278 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டும் போது 205 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி அடைய ஆப்கானிஸ்தான் அணி 2 டெஸ்ட்கள் கொண்ட தொடரை 1-0 என்று வென்றது.

மாஸ்டர் ஸ்பின்னர் ரஷீத் கான் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள், 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளுடன் 11 விக்கெட்டுகளை இந்த டெஸ்ட் போட்டியில் கைப்பற்றினார். முதல் டெஸ்ட் போட்டி இரு அணிகளும் 550 ரன்களுக்கு மேல் எடுத்ததால் டிரா ஆனது. முதல் டெஸ்ட்டில் ஆப்கன் வீரர்கள் ரஹ்மத் ஷா 234 ரன்களையும் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷஹீதி 246 ரன்களையும் அஃப்சர் சசாய் 113 ரன்களையும் எடுக்க ஜிம்பாப்வேயின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 586 ரன்களுக்கு எதிராக ஆப்கன் 699 ரன்கள் எடுத்து புதிய டெஸ்ட் சாதனையை நிகழ்த்தியது. அந்த டெஸ்ட் டிரா ஆனது.

2-வது டெஸ்ட் போட்டி புலாவாயோவில் நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 157 ரன்களுக்குச் சுருண்டது, ஜிம்பாப்வே 243 ரன்கள் எடுத்து 86 ரன்களை முன்னிலையாகவும் பெற்றது, ஆனால் மீண்டெழுந்த ஆப்கன் இரண்டாவது இன்னிங்ஸில் ரஹ்மத் ஷாவின் 139 ரன்களினாலும் நம்பர் 8 வீரர் இஸ்மத் ஆலம் எடுத்த 101 ரன்களாலும் 363 ரன்களைக் குவிக்க, ஜிம்பாப்வேவுக்கு வெற்றி இலக்கு 278 ரன்கள். ஆனால் ரஷீத் கானின் மேஜிக்கினால் 205 ரன்களுக்குச் சுருண்டது. ரஷீத் கான் ஆட்ட நாயகனாகவும் ரஹமத் ஷா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடர் வெற்றி சில சாதனைத் துளிகளுக்குக் காரணமாகியுள்ளது:

>11 டெஸ்ட்களை ஆடியுள்ள ஆப்கன் அணி அதில் 4 டெஸ்ட்களில் வென்று ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது, அதாவது ஆஸ்திரேலிய அணிதான் தன் முதல் 11 டெஸ்ட்களில் 6 வெற்றிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதனால்தான் ஆப்கன் ஆஸ்திரேலியாவுக்கு பிறகு நாங்கதான் என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறிக் கொள்ளலாம்.

>அதே போல் ஆசியாவுக்கு வெளியே தங்கள் முதல் டெஸ்ட் தொடரிலேயே வென்று ஆப்கன் சாதனை புரிந்துள்ளது, ஆசிய அணிகளிலேயே முதல் அயல்நாட்டு தொடரையே வென்ற அணி என்ற சாதனையையும் ஆப்கன் நிகழ்த்தியுள்ளது. பாகிஸ்தானும் இலங்கையும் 9 தொடர்களுக்குப் பிறகுதான் முதல் அந்நிய மண்ணில் வெற்றியைச் சாதிக்க முடிந்தது.

>ரஷீத் கான் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது என்பது தொடர்ந்து ஒரே அணியுடன் அடுத்தடுத்து 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய டேல் ஸ்டெய்ன் சாதனையைச் சமன் செய்துள்ளது.

>ரஷீத் கான் இந்த டெஸ்ட் போட்டியின் 2-ம் இன்னிங்ஸில் எடுத்த 66 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்பது ஆப்கன் பவுலர் ஒருவரின் ஆகச்சிறந்த டெஸ்ட் ஸ்பெல் ஆகும்.

>ஆப்கன் நம்பர் 8 வீரர் இஸ்மத் ஆலம் 8-ம் நிலையில் இறங்கி அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

>வெர்னன் பிலாந்தருக்கு இணையாக ரஷீத் கான் தன் 6 டெஸ்ட் போட்டிகளில் 45 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

>அதே போல் கடைசி 5 விக்கெட்டுகளுக்காக 294 ரன்களை ஆப்கன் இந்த டெஸ்ட்டில் சேர்த்தது ஆசிய அணிகளில் 5-வது சிறந்த கடைசி 5 விக்கெட் ரன்களாகும்.

SCROLL FOR NEXT