காமன்வெல்த் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது. சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் ஹாக்கியில் வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணியில் கேப்டன் சர்தார் சிங் சஸ்பெண்ட் காரணமாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக மாற்று கேப்டனாக ரூபிந்தர் பால் சிங் செயல்பட்டார். நியூஸிலாந்து அணி முதல் 18 நிமிடங்களில் இரு கோல்களை அடித்து 2-0 என முன்னிலை பெற்றது. இதன்பிறகு சரிவிலிருந்து மீண்ட இந்திய அணிக்கு ரூபிந்தர் பால், ரமன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோலடித்து வெற்றி தேடித்தந்தனர்.