ஜெய்ஸ்வால் 
விளையாட்டு

மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா: ஜெய்ஸ்வால் ஆறுதல்!

செய்திப்பிரிவு

மெல்பர்ன்: மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 184 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் 2-1 என அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றன. மூன்றாவது போட்டி டிரா ஆனது.

இந்நிலையில், நான்காவது போட்டி மெல்பர்னில் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து 474 ரன்கள் எடுத்தது. ஸ்மித் சதம் விளாசினார். சாம் கான்ஸ்டாஸ், கவாஜா மற்றும் லபுஷேன் அரைசதம் கடந்தனர். கேப்டன் கம்மின்ஸ் 49 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியாவின் இளம் வீரர் நிதிஷ் ரெட்டி 114 ரன்கள் எடுத்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டார். ஜெய்ஸ்வால் 82 மற்றும் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், லயன் மற்றும் போலண்ட் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

105 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரலேயா இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 234 ரன்கள் எடுத்து அந்த அணி ஆட்டம் இழந்தது. இதில் லபுஷேன் 70 ரன்கள் எடுத்தார். கம்மின்ஸ் மற்றும் லயன் தலா 41 ரன்கள் எடுத்திருந்தனர். கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லயன் மற்றும் போலண்ட் கூட்டணி இந்தியாவுக்கு இம்சை கொடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நான்கு கேட்ச்களை இந்தியா நழுவ விட்டிருந்தது.

340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆட்டத்தின் கடைசி நாளான இன்று இந்தியா விரட்டியது. கேப்டன் ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ரோஹித், 9 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். அதே ஓவரில் கே.எல்.ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஸ்டார்க் பந்தில் கோலி வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் சிறப்பான கூட்டணி அமைத்தனர். தேநீர் நேர பிரேக் வரை இந்தியா விக்கெட் இழக்காமல் ஆடியது. அதன் பின்னர் டிராவிஸ் ஹெட் வீசிய பந்தை பெரிய ஷாட் ஆட முயன்று மார்ஷ் வசம் கேட்ச் கொடுத்து பந்த் ஆட்டமிழந்தார். அவர் 104 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தார்.

தொடர்ந்து சீரான இடைவெளியில் இந்தியா விக்கெட் இழந்தது. ஜடேஜா 2, நிதிஷ் 1 ரன்னில் வெளியேறினார். 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். மூன்றாவது நடுவரின் முடிவால் அவர் அவுட் என உறுதி செய்யப்பட்டது. ஆகாஷ் தீப் 7, பும்ரா மற்றும் சிராஜ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 45 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்தார். 79.1 ஓவர்களில் 155 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 184 ரன்களில் வென்றது. கம்மின்ஸ் மற்றும் போலண்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கம்மின்ஸின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு செயல்பாட்டுக்காக இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த தொடரின் கடைசி போட்டி வரும் ஜனவரி 3-ம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT