விளையாட்டு

அஸ்வினின் சாதனையை சமன் செய்த பும்ரா: ஐசிசி டெஸ்ட் பவுலர் தரவரிசையில் 904 புள்ளிகளை பெற்றார்

செய்திப்பிரிவு

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் 904 புள்ளிகளை பெற்ற இரண்டாவது இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் பும்ரா. இதன் மூலம் அஸ்வினின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். கடந்த 2016-ல் அஸ்வின் இதை எட்டி இருந்தார்.

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களில் 900+ புள்ளிகளை கடந்த பந்து வீச்சாளர்களில் 26-வது வீரராக பும்ரா இணைந்துள்ளார். 932 புள்ளிகளுடன் முன்னாள் இங்கிலாந்து வீரர் சிட்னி பார்ன்ஸ், அதிக புள்ளிகளை பெற்ற பந்து வீச்சாளர்களில் முதலிடத்தில் உள்ளார். இப்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் கம்மின்ஸ் 914 புள்ளிகள் (2019) மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 902 புள்ளிகள் (2018) பெற்றுள்ளனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றி உள்ளார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் அவர் முதலிடத்தில் உள்ளார். இத்தொடரில் மேலும் இரண்டு போட்டிகள் விளையாட வேண்டி உள்ளது.

பிரிஸ்பன் போட்டியில் 9 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றி இருந்தார். அதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 14 புள்ளிகளை கூடுதலாக பெற்று 904 புள்ளிகளை எட்டி அசத்தியுள்ளார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் பும்ரா தற்போது முதலிடத்தில் உள்ளார். 856 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ரபாடாவும், 852 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட்டும் இந்தப் பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர்.

31 வயதான பும்ரா, கடந்த 2018 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இதுவரை 43 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 194 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மெல்பர்னில் நாளை தொடங்கும் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட் சாதனையை அவர் எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT