விளையாட்டு

'அஸ்வின் இப்படி விடைபெற நான் அனுமதித்திருக்க மாட்டேன்' - கபில் தேவ் ஆதங்கம்

செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் பெற்றுள்ளது பலரையும் அதிர்ச்சி கொள்ள செய்துள்ளது. இந்நிலையில், நான் அங்கு இருந்திருந்தால் அஸ்வின் இப்படி விடைபெற்று செல்ல அனுமதித்திருக்கக் மாட்டேன் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

“இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான அஸ்வினின் ஓய்வு முடிவு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரது இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பரவலாக ஏமாற்றத்தை தந்துள்ளது. அவரது முகத்தில் அந்த வேதனையை நான் பார்த்தேன். அவர் மகிழ்ச்சியாக இல்லை. அது வருத்தம் தான். அவருக்கு சொந்த மண்ணில் திருப்திகரமான ஃபேர்வெல் போட்டியை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

அவர் கொஞ்சம் காத்திருந்து சொந்த மண்னில் ஓய்வை அறிவித்திருக்கலாம். அது குறித்து நான் அறிய விரும்புகிறேன். அவருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். தேசத்துக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மகத்தான வீரர். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது. இந்தியாவின் மேட்ச் வின்னரான அவருக்கு பிசிசிஐ பெரிய அளவில் ஃபேர்வெல் நடத்தும் என நான் நம்புகிறேன். நான் அங்கு இருந்திருந்தால் அவர் இப்படி விடைபெற்று செல்ல அனுமதித்திருக்க மாட்டேன்.

ஆட்டத்தின் எந்தவொரு கட்டத்திலும் அந்த சூழலுக்கு ஏற்ப பந்து வீசும் திறன் கொண்டவர். அவரது கிரிக்கெட் மூளை அபாரமானது. இந்தியாவுக்காக அதிக தொடர் நாயகன் விருதை வென்றவர். அவர் பேட்டிங்கும் செய்வார். நல்வாய்ப்பாக நாங்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் விளையாடவில்லை. அப்படி இருந்திருந்தால் அணியில் எனக்கான இடத்தை அவரிடம் இழந்திருப்பேன்.

அஸ்வின் ஒரு சாம்பியன். அவர் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளார். அவருக்கு உலகின் அனைத்து மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்." என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT