விளையாட்டு

‘அடுத்த தோனி’ - சஞ்சு சாம்சன் குறித்த தனது பழைய ட்வீட்டை பகிர்ந்த சசி தரூர்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சஞ்சு சாம்சன் டி20 கிரிக்கெட்டில் சதங்களை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்னர் ‘அடுத்த தோனி’ என அவரை குறிப்பிட்ட தனது ட்வீட்டை மீண்டும் பகிர்ந்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்.

கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இரண்டு சதங்களை பதிவு செய்துள்ளார். அவர் கடைசியாக விளையாடிய 5 டி20 போட்டிகளில் மூன்று சதங்களை பதிவு செய்துள்ளார். அணியின் தொடக்க ஆட்டக்காரராக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தான் சஞ்சு சாம்சனை தீவிர ஆதரவாளரான சசி தரூர், தனது பழைய ட்வீட்டை ரீ-ஷேர் செய்துள்ளார். “கேரள ரஞ்சிக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்த ரோஹன் பிரேம் மற்றும் 15 வயதேயான சஞ்சு சாம்சனை (அடுத்த தோனி) கொஞ்சம் பாருங்கள்” என அதில் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

அந்த ட்வீட்டை இப்போது பகிர்ந்துள்ள அவர், “15 ஆண்டுகளுக்குப் பிறகு ‘அப்போதே நான் சொன்னேன்’ என்று சொல்வது மிகவும் அற்புதமானது” என சொல்லியுள்ளார். அதில் சஞ்சு சாம்சன், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பிசிசிஐ மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் கேப்டனாக வழிநடத்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை டேக் செய்துள்ளார்.

இதற்கு முன்பு இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்ட போது, சசி தரூர் குரல் கொடுத்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT