விளையாட்டு

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிப்போம்: மிஸ்பா உல் ஹக்

செய்திப்பிரிவு

இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தானை நம்பர் ஒன் நிலைக்கு இட்டுச் செல்வதே இலக்கு என்று கூறியுள்ளார்.

தற்போது டெஸ்ட் தரவரிசையில் 3ஆம் இடத்தில் உள்ள பாகிஸ்தான், 2006ஆம் ஆண்டு 2ஆம் இடம் வரை உயர்ந்தது. ஆனால் நம்பர் ஒன் இடத்தை இதுவரை பிடித்ததில்லை.

இலங்கையை இந்தத் தொடரில் வீழ்த்தி பிறகு அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் வென்று பாகிஸ்தானை முதலிடத்திற்கு இட்டுச் செல்வோம் என்கிறார் மிஸ்பா.

"முதலிடத்தைப் பிடிக்க எங்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை தவறவிடப்போவதில்லை. நீண்ட நாட்கள் கழித்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால் அனுகூலமும் இருக்கிறது பிரதிகூலமும் இருக்கிறது.

இடைவெளி இருந்ததால் உடற்தகுதி உள்ளிட்ட விவகாரங்களில் நல்ல பயிற்சி செய்தோம், பிறகு உத்திரீதியாக சிறிது கவனம் செலுத்தினோம். இப்போதைக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி கால்லே மைதானத்தில் தொடங்கும் முதல் டெஸ்ட் பற்றியே கவனம் உள்ளது” என்றார் மிஸ்பா.

பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் கூறுகையில், “2015 உலகக் கோப்பையே இலக்கு, அதற்கு முன்னால் இலங்கைக்கு எதிரான தொடர் பிறகு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இவற்றில் வெற்றி பெறுவதே நோக்கம்.

இலங்கைக்கு எதிராக கடந்த தொடரில் கடைசி நாளில் 302 ரன்கள் வெற்றி இலக்கைத் துரத்தியதிலிருந்து அணி வீர்ர்கள் ஊக்கம் பெற்றுள்ளனர்.

அதே பாதையில், தென் ஆப்பிரிக்காவை முன் உதாரணமாகக் கொண்டு இந்த்த் தொடரையும் கைப்பற்றுவோம்” என்றார்.

பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளராக ஜிம்பாவே அணியின் முன்னாள் வீரர் கிராண்ட் ஃபிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT