விளையாட்டு

இருமுறை 300 ரன்கள் அடித்தும் எனக்கு மதிப்பில்லை: கிறிஸ் கெய்ல் காட்டம்

செய்திப்பிரிவு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருமுறை 300 ரன்களை எடுத்திருந்த போதும், ஜமைக்காவிற்காக நிறைய செய்தும் அந்த அரசு தன்னை மதிக்கவில்லை என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் கடுமையாகச் சாடியுள்ளார்.

வரிவிலக்கு கேட்டிருக்கிறார் கிறிஸ் கெய்ல், ஆனால் ஜமைக்கா அரசு தொடர்ந்து அந்த கோரிக்கையை நிராகரித்து வருகிறது என்று அவர் 'தி டெலிகிராப்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

“ஜமைக்கா அரசு மீது நான் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளேன். நான் கேட்பதெல்லாம் கொஞ்சம் நாகரிகம், சிறு அங்கீகாரம் அவ்வளவே. 2 முறை முச்சதங்கள் அடித்துள்ளேன், ஆனால் விமான நிலையத்தில் ஒரு கேமரா கூட என்னை புகைப்படம் எடுக்க வரவில்லை. இது என்னைக் காயப்படுத்துகிறது. ஜமைக்காவில் மருத்துவமனைகள், பள்ளிகள் என்று நான் நிறைய உதவி புரிந்துள்ளேன், விளையாட்டுத் தூதராக ஜமைக்கா அரசை இருமுறை ஒரு சிறு சகாயம் செய்ய கோரிக்கை வைத்தேன், ஆனால் இருமுறையும் அரசு கண்டுகொள்ளவில்லை.

ஆனால் ஜமைக்காவிற்காக ஒரு துரும்பைக் கூட அசைக்காதவர்கள் நிறைய இந்த அரசினால் பயனடைந்து வருகின்றனர். நான் லட்சக்கணக்கில் வரி செலுத்தியுள்ளேன். நான் இப்போது கேட்பது சிறு வரி விலக்கு அவ்வளவே. இனி இந்த அரசிடம் எதுவும் கேட்கப்போவதில்லை.

ஒருவர் இறந்த பிறகே அவரைப்பற்றி நல்ல விஷயங்கள் கூறப்படுகிறது. ஆனால் வாழ்க்கையில் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றால் அவர் உயிருடன் இருக்கும்போதே செய்யவேண்டும். அதனை விடுத்து ஒருவர் உயிர்துறக்கும் வரை காத்திருப்பது ஏன்? பிறகு ‘ஆகா! இவர் இவ்வளவு பெரிய வீரர், இவர் இத்தனை செய்திருக்கிறார்’ என்று புகழ்வதில் ஒருவருக்கும் பயனில்லை.

இப்படித்தான் நான் உணர்கிறேன், அதை வெளிப்படையாகக் கூறுகிறேன். எனக்கு வருத்தங்கள் இல்லை. இருந்தாலும் அரசுக்கு எனது செய்தி சென்றடைய வேண்டும்.

நான் ஒன்றுமில்லாமல் வளர்ந்தேன், இப்போது கொஞ்சம் பணம் சம்பாதித்துள்ளேன். இப்போது நான் தைரியமாகக் கேட்கலாம் எனக்கு அந்தக் கார் வேண்டும், இந்த வீடு வேண்டும் என்று. இப்படித்தான் நான் ஆரம்பித்தேன்.

இன்று ஜமைக்காவின் சிறுபிராயத்தினர் அபாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களுக்காக அகாடமி ஆரம்பித்து அவர்களை வழிநடத்துகிறேன். உங்கள் முன்னால் வாழ்க்கை இருக்கிறது, மனதைத் தளர விடாதீர்கள், துப்பாக்கியத் தூக்கி யாரையாவது சுட்டுத் தள்ளிவிட்டு ஜெயிலுக்குச் செல்வது வாழ்க்கையா என்பதை அவர்களுக்கு நான் கொஞ்சம் கொஞ்சமாக அறிவுறுத்தி வருகிறேன்”

இவ்வாறு அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார் கெய்ல்.

SCROLL FOR NEXT