விளையாட்டு

ODI WC 2023-ல் ஆப்கனுக்கு எதிராக மேக்ஸ்வெல்லின் ‘பிக் ஷோ’ | மறக்குமா நெஞ்சம்

செய்திப்பிரிவு

மும்பை: ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆகச் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று 2023 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் ஆட்டம். கடந்த ஆண்டு இதே நாளில் (நவ.7) மும்பையின் வான்கடே மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இது கிரிக்கெட் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாதது.

மும்பை வான்கடே மைதானத்தில் 292 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் விரட்டியது. 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தோல்வியின் பிடியில் தடுமாறியது. டிராவில் ஹெட், மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், இங்க்லிஸ், லபுஷேன், ஸ்டாய்னிஸ், ஸ்டார்க் ஆகியோர் ஆட்டம் இழந்திருந்தனர். அதுவும் 18.3 ஓவர்களில். இனி ஆஸ்திரேலியாவுக்கு தோல்வி தான் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மேக்ஸ்வெல் தன் அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் கம்மின்ஸ் உடன் சேர்ந்து 202 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். அது வெற்றிக் கூட்டணியாக அமைந்தது.

128 பந்துகளில் 201 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக டிரஸ்ஸிங் ரூம் திரும்பினார். அது ஆஸ்திரேலிய அணிக்காக மேக்ஸ்வெல் வெளிப்படுத்திய பெஸ்ட் இன்னிங்ஸ். 21 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் இதில் அடங்கும். 46.5 ஓவர்களில் 293 ரன்கள் எடுத்து ஆஸி வெற்றி பெற்றது. அரையிறுதிக்கு முன்னேறியது. இதுமாதிரியான வெற்றி கொடுத்த உத்வேகம் தான் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் உலகக் கோப்பையை வெல்லவும் உதவியது.

தசை பிடிப்பு: இந்தப் போட்டியில் தசை பிடிப்பு காரணமாக களத்தில் கால்களை நகர்த்த முடியாமல் தவித்தார் மேக்ஸ்வெல். ஒரு கட்டத்தில் அப்படியே முடியாமல் படுத்தும் விட்டார். இருந்தும் அந்த வலியை பொறுத்துக் கொண்டு அபாரமாக ஆடி அதகளம் செய்தார்.

SCROLL FOR NEXT