விளையாட்டு

ஐபிஎல் மெகா ஏலம்: ஜேம்ஸ் ஆண்டர்சன் உட்பட 1574 வீரர்கள் பதிவு!

ஆர்.முத்துக்குமார்

மும்பை: சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறுகிறது. நவம்பர் 4-ம் தேதியுடன் முடிந்த வீரர்கள் பதிவு விவரங்களின் படி 1,574 வீரர்கள் தங்கள் பெயர்களை ஏலத்திற்காக பதிவு செய்துள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவெனில் 2014-ல் கடைசியாக டி20 போட்டியில் ஆடிய ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் ஏலத்தில் தன் பெயரையும் பதிவு செய்துள்ளார் என்பதே.

மாறாக அணிகள் தேடி பிடித்துப் போடும் ஒரு வீரரான பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் ஏலத்திலிருந்து விலகியுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் கடைசியாக டி20 சர்வதேசப் போட்டியில் ஆடியது 2009-ல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பதிவு செய்த 1,574 வீரர்களில் 1,165 இந்திய வீரர்களும், 409 அயல்நாட்டு வீரர்களும் அடங்குவர். 320 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய கேப்டு வீரர்கள், 1,224 பேர்உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி அன்கேப்டு வீரர்கள், அசோசியேட் நாடுகளிலிருந்து 30 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக பிசிசிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • கேப்டு இந்திய வீரர்கள் - 48
  • கேப்டு சர்வதேச வீரர்கள் - 272
  • கடந்த ஐபிஎல் தொடர்களில் ஆடிய அன்கேப்டு இந்திய வீரர்கள் - 152
  • கடந்த ஐபிஎல் சீசன்களில் விளையாடிய அன் கேப்டு சர்வதேச வீரர்கள் - 3
  • அன் கேப்டு இந்திய வீரர்கள் - 965
  • அன்கேப்டு சர்வதேச வீரர்கள் - 104

ஏலத்திற்காக பதிவு செய்துள்ள 409 அயல்நாட்டு வீரர்களில் 91 வீரர்களுடன் தென் ஆப்பிரிக்கா முதலிடம் வகிக்கிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து 76 வீரர்கள், இங்கிலாந்திலிருந்து 52 வீரர்கள்.

மற்ற நாட்டு வீரர்கள் எண்ணிக்கை: ஆப்கானிஸ்தான் 29, வங்கதேசம் 13, கனடா 4, அயர்லாந்து 9, இத்தாலி 1, நெதர்லாந்து 12, நியூஸிலாந்து 39, ஸ்காட்லாந்து 2, இலங்கை 29, யுஏஇ 1, அமெரிக்கா 10, வெஸ்ட் இண்டீஸ் 33, ஜிம்பாப்வே 8.

இந்த மெகா ஏலத்தில் 204 வீரர்களை 10 அணி உரிமையாளர்களும் சேர்ந்து ரூ.641.5 கோடி வரை செலவு செய்யலாம். இந்த 204 வீரர்களுக்கான ஸ்லாட்களில் 70 ஸ்லாட்கள் அயல்நாட்டு வீரர்களுக்கானது. தற்போதைய நிலவரப்படி 10 அணிகளும் மொத்தம் 46 வீரர்களை தக்கவைத்துள்ளனர். இதற்கான மொத்த செலவு ரூ.558.5 கோடி.

SCROLL FOR NEXT