ரச்சின் ரவீந்திரா 
விளையாட்டு

ரச்சின் சதம்: முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 356 ரன்கள் முன்னிலை | IND vs NZ முதல் டெஸ்ட்

செய்திப்பிரிவு

பெங்களூரு: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 356 ரன்கள் முன்னிலை. அந்த அணியின் ரச்சின் ரவீந்திரா 134, கான்வே 91 மற்றும் சவுதி 65 ரன்கள் எடுத்தனர்.

நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களுருவில் நடைபெற்று வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்தானது.

இந்நிலையில், இரண்டாம் நாளன்று டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய நியூஸிலாந்து அணி 91.3 ஓவர்களில் 402 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

கான்வே 105 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்தார். ரச்சின் ரவீந்திரா 157 பந்துகளில் 134 ரன்கள் எடுத்தார். சவுதி 73 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் முன்னிலை பெற்றது நியூஸிலாந்து. தற்போது இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இந்தியா சார்பில் குல்தீப் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிராஜ் 2 மற்றும் பும்ரா, அஸ்வின் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா பொறுப்புடன் விளையாட வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

SCROLL FOR NEXT