ஷார்ஜா: மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.
ஷார்ஜா மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே 3 லீக் ஆட்டங்களில் பஙகேற்றுள்ள இந்திய மகளிர் அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டும். என்ற கட்டாயத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 2.786 நிகர ரன் விகிதத்துடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.
இதைத் தொடர்ந்து இந்த பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்காக போராடி வருகின்றன. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் 6 புள்ளிகளுடன் அரை இறுதிக்கான தனது வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும். ஒருவேளை தோல்வி கண்டால், மற்ற அணிகளின் வெற்றி வாய்ப்பைப் பொறுத்து இந்திய அணியின் அரை இறுதிச் சுற்று வாய்ப்பு அமையும். எனவே, இது வாழ்வா? சாவா? போட்டியாக இந்திய அணிக்கு அமைந்துள்ளது.
எனவே, இந்திய அணி உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவை வெல்வதற்கான வாய்ப்புகைள உருவாக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதேநேரத்தில் இந்த போட்டியில் இதுவைர தோல்வியே காணாத ஆஸ்திரேலிய அணி அதிக உற்சாகத்துடன் களமிறங்குகிறது. இந்த அணியின் கேப்டன் அலிசா ஹீலி, டாய்லா விளாமின்க் ஆகியோர் காயமைடந்துள்ளதால் இன்றைய போட்டியில் களமிறங்குவது சந்தேகம்தான்.