விளையாட்டு

அதிவேக 50, 100, 200, 250 - டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி புதிய சாதனை!

செய்திப்பிரிவு

கான்பூர்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிவேகமாக 50, 100, 200, 250 ரன்களைச் சேர்த்த அணி என்ற புதிய வரலாறு படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் முதல் நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்களைச் சேர்த்தது. 2 மற்றும் 3 நாட்களில் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இன்று (செப்.30) நடைபெற்ற 4-வது நாள் போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம் 233 ரன்களைச் சேர்த்தது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தது. இருவரும் சேர்ந்து பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டனர். 3 ஓவர்களில் இருவரும் இணைந்து 51 ரன்களை விளாசினர். அடுத்த ஓவரிலேயே ரோகித் ஷர்மா 23 ரன்களுடன் வெளியேறினார். 31 பந்துகளில் ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார். 10.1 ஓவரில் 100 ரன்களை குவித்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100 ரன்களை சேர்த்த அணி என்ற சாதனை படைத்தது இந்தியா. 51 பந்துகளில் 72 ரன்களை சேர்த்து விக்கெட்டானார் ஜெய்ஸ்வால். ஷுப்மன் கில் 39 ரன்களில் அவுட். 21.1 ஓவரில் 150 ரன்களை சேர்த்த இந்திய அணி அதிவேக ரன் சாதனை படைத்தது.

ரிஷப் பந்த் 9 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் கொடுத்தார். 24.2 ஓவர்களில் அதிவேக 200 ரன்களை குவித்தது இந்தியா. 30.1 ஓவர் முடிவில் அதிவேக 250 ரன்களை கடந்தது. விராட் கோலி 47 ரன்களிலும், ஜடேஜா 8 ரன்களிலும், அஸ்வின் 1 ரன்னிலும், கே.எல்.ராகுல் 68 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆகாஷ் தீப் 12 ரன்னில் பெவிலியன் 34.4 ஓவரில் இந்திய அணி 285 ரன்களை சேர்த்து இருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதையடுத்து விளையாடி வங்கதேசம் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்தப் போட்டியின் மூலம் இந்தியா அதிவேக ரன்சாதனையை நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT