கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக டுவைன் பிராவோ அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவரது வீடியோவுடன் வெளியிட்டுள்ளது கொல்கத்தா அணி.
40 வயதான பிராவோ, டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலராக திகழ்கிறார். 582 ஆட்டங்களில் 631 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக 2004 முதல் 2021 வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 161 ஆட்டங்களில் விளையாடி 1560 ரன்கள் மற்றும் 183 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 116 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். 1004 ரன்கள் மற்றும் 140 விக்கெட்டுகளை சிஎஸ்கே அணிக்காக கைப்பற்றியுள்ளார். சிஎஸ்கே அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். அதே நேரத்தில் மற்ற சில டி20 லீக் கிரிக்கெட்டில் விளையாடி வந்தார். காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதையடுத்து கொல்கத்தா அணியின் ஆலோசகராக இணைந்துள்ள அறிவிப்பு வெளியானது.
“எனக்கு எல்லாமும் கொடுத்த கிரிக்கெட் விளையாட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். ஐந்து வயதில் இருந்தே இந்த விளையாட்டில் எனக்கு ஆர்வம். அதில் நான் செய்ய விரும்பியதை செய்தேன். அது தான் எனது விதியும் கூட. எனக்கு வேறு எதிலும் ஆர்வம் இருந்ததில்லை. இதற்காகவே எனது மொத்த வாழ்க்கையையும் நான் அர்ப்பணித்தேன். அதற்கான பலன் எனக்கும், எனது குடும்பத்துக்கும் கிடைத்தது. அதற்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது” என பிராவோ தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
“பிராவோ எங்கள் அணியில் இணைவது உற்சாகமான டெவலப்மென்ட். அவரது அனுபவமும், கிரிக்கெட் அவருக்குள்ள ஆழமான அறிவு ஆகியவை எங்கள் அணிக்கும், வீரர்களுக்கும் பெரிதும் உதவும். அவர் நைட் ரைடர்ஸின் உலக அளவிலான ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் ஒரு அங்கமாகி இருப்பார்” என நைட் ரைடர்ஸ் குழுமத்தின் சிஇஓ வெங்கி மைசூரு தெரிவித்துள்ளார்.
“நைட் ரைடர்ஸ் குழுமத்தின் அணியின் பல்வேறு லீக் தொடர்களில் விளையாடிய அனுபவம் எனக்கு உள்ளது. அவர்கள் இயங்கும் விதத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. உரிமையாளரின் பேஷன் மற்றும் அவர்களின் நிர்வாக செயல்பாடு, குடும்பத்தின் போல சூழலும் சிறந்த இடத்தை அளிக்கிறது. அடுத்த தலைமுறை வீரர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்க எனக்கு இது சிறந்த வாய்ப்பாக பார்க்கிறேன்” என பிராவோ தெரிவித்துள்ளார். கவுதம் கம்பீர் கவனித்த ஆலோசகர் பணியை எதிர்வரும் 2025 ஐபிஎல் சீசனில் அவர் கவனிக்க உள்ளார்.