புது டெல்லி: கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்பியது மட்டுமல்லாமல், சதத்தை விளாசி அணியின் வெற்றியில் பங்களிப்பு செய்ததோடு மீண்டும் இந்திய பேட்டிங் வரிசையின் தவிர்க்க முடியாத முக்கியஸ்தர் ஆனது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
2023-ம் ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்புவோமா என்ற ஐயத்துடனும் கவலையுடனும் வாழ்ந்து வந்தார் ரிஷப். தோனி அத்தனையாண்டு காலம் அத்தனை டெஸ்ட் போட்டிகளை ஆடி வெறும் 6 சதங்களையே எடுக்க ரிஷப் பந்த் இப்போதே டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 சதங்களை எடுத்து அவரைச் சமன் செய்துள்ளார். ரிஷப் ஒருநாள் போட்டிகள், டி20-யில் ஆடுவதை விட தன்னம்பிக்கையுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது அவரது உடல் மொழியில் வெட்ட வெளிச்சமாக சேப்பாக்கத்தில் தெரிந்தது.
“ஆம், உண்மையில் மீண்டு வருவது ஒரு பிரமாதமான விஷயம். ஒவ்வொரு போட்டியிலுமே ரன்களைக் குவிக்க ஆசைப்படுகிறேன். முதல் இன்னிங்ஸில் முடியாமல் போய்விட்டது தவறிழைத்து விட்டேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவதுதான் எனக்குப் பிடித்தமானது, டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம்தான் எனக்கான ஆட்டம் என்று நினைக்கிறேன். அதற்கு இவ்வகையில் திரும்பியிருப்பது உண்மையில் கிரேட். பேட்டிங்கை வேண்டி விரும்பி மேற்கொள்கிறேன். கொஞ்சம் உணர்ச்சிவசமும் பட்டேன். கடைசியில் களத்தில் நிற்பதுதான் எனக்கான மகிழ்ச்சி. திருப்தி.
சென்னையில் விளையாடுவது எனக்கு ஸ்பெஷல். அனைத்து வடிவங்களிலும் விளையாட ஆசைப்படுகிறேன். டெஸ்ட் ஆட்டத்தில் சூழ்நிலையை சரியாகப் புரிந்து கொண்டு ஆட வேண்டும். முதல் இன்னிங்ஸில் அப்படித்தான் ஆடினேன். இரண்டாவது இன்னிங்ஸில் கொஞ்சம் ஃப்ரீயாக ஆடினேன்” என்றார். கேப்டன் ரோஹித் சர்மாவும் ரிஷப் பந்தை புகழ்ந்து தள்ளினார், “கடினமான காலங்களிலிருந்து மீண்டு வந்துள்ளார். கடினமான காலங்களில் அவர் தன்னை மேலாண்மை செய்து கொண்ட விதம் அபாரம். ஐபிஎல் ஆடினார். உலகக்கோப்பையில் ஆடினார். டி20 வடிவம் அவருக்குப் பிடித்தமான வடிவமாக இருக்க வேண்டும்.
ரிஷப் பந்தை பொறுத்தவரை எங்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை, கையில் மட்டையிருந்தாலும், கிளவ் இருந்தாலும் அவர் பணி மீது நாங்கள் கவலை கொண்டதில்லை. துலிப் டிராபியில் ஆடி நேராக இங்கு வந்தார். அவரது தாக்கம் நேரடியாகவே வெளிப்பட்டு விட்டது” என்றார் ரோஹித் சர்மா.