சென்னை: சென்னை - சேப்பாக்கத்தில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது களத்தில் பேட் செய்த ரிஷப் பந்த் அந்த அணிக்கு ஃபீல்ட் செட் செய்திருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில், அது குறித்து ரிஷப் பந்த் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 128 பந்துகளில் 109 ரன்கள் எடுத்திருந்தார் பந்த். அது அணியின் வெற்றிக்கு உதவியது. இந்த இன்னிங்ஸின் போதுதான் வங்கதேசத்துக்கு ஃபீல்ட் செட் செய்திருந்தார்.
“கிரிக்கெட்டின் தரம் சிறப்பானதாக இருக்க வேண்டும். அது நாம் விளையாடுகின்ற அணியாக இருந்தாலும் சரி அல்லது நம்மை எதிர்த்து விளையாடுகின்ற அணியாக இருந்தாலும் சரி. களத்தில் சரியான இடத்தில் நிற்காத ஃபீல்டரை நான் கவனித்தேன். அதனால் தான் அதை சரி செய்தேன். அவர்களுக்கு ஃபீல்ட் செட் செய்ய இதுதான் காரணம். இது ஒரு வகையில் அவர்களுக்கு நான் செய்த உதவி. அதை நான் விரும்பியே செய்தேன்” என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
அவரது சொல்லுக்கு ஏற்ப மிட்-விக்கெட் திசையில் ஃபீல்ட் மாற்றம் செய்திருந்தார் வங்கதேச கேப்டன் ஷான்டோ.
34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள பந்த், 2419 ரன்கள் குவித்துள்ளார். 11 அரைசதம் மற்றும் 6 சதம் பதிவு செய்துள்ளார். சேப்பாக்கத்தில் வங்கதேச அணிக்கு எதிராக 128 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்திருந்தார்.