இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 70 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட பாகிஸ்தான் இன்னும் 76 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை, முதல் நாளான வியாழக்கிழமை ஆட்டநேர முடிவில் 85.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்திருந்தது. தமிகா பிரசாத் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
2-வது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 284 ரன்களை எட்டியபோது தமிகா பிரசாத் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரங்கனா ஹெராத்துடன் இணைந்தார் வெலகெதரா. ஹெராத் நிதானமாக ஆட, மறுமுனையில் வேகம் காட்டிய வெலகெதரா பவுண்டரிகளை விரட்ட 300 ரன்களைக் கடந்தது இலங்கை.
அந்த அணி 99.3 ஓவர்களில் 320 ரன்கள் எடுத்திருந்தபோது ஹெராத் 17 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, இலங்கையின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. வெலகெதரா 30 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் தரப்பில் ஜூனைத் கான் 5 விக்கெட்டுகளையும், வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சிறப்பான தொடக்கம்
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் குர்ரம் மன்சூர்-அஹமது ஷெஸாத் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்தது. மன்சூர் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அசார் அலி களம்புகுந்தார். ஷெஸாத்-அலி ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 28.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது பாகிஸ்தான்.
ஹெராத் அபாரம்
இதனால் பாகிஸ்தான் வலுவான ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அசார் அலி 32 ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தானின் மிடில்ஆர்டரை சாய்த்தார் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத். அஹமது ஷெஸாத் 58 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் யூனிஸ்கான் 13 ரன்களிலும், கேப்டன் மிஸ்பா உல் ஹக் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 140 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பாகிஸ்தான்.
சரிவிலிருந்து மீட்ட சர்ஃப்ராஸ்
பின்னர் 6-வது விக்கெட்டுக்கு இணைந்த ஆசாத் ஷபிக்-சர்ஃப்ராஸ் அஹமது ஜோடி பாகிஸ்தானை சரிவிலிருந்து தூக்கி நிறுத்தியது. சிறப்பாக ஆடிய சர்ஃப்ராஸ் அஹமது 64 பந்துகளில் அரைசதமடித்தார். அந்த அணி 233 ரன்களை எட்டியபோது ஆசாத் ஷபிக் 42 ரன்களில் ஹெராத் பந்துவீச்சில் போல்டு ஆனார். ஷபிக்-சர்ஃப்ராஸ் ஜோடி 93 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து அப்துர் ரெஹ்மான் களம்புகுந்தார். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 70 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்துள்ளது. சர்ஃப்ராஸ் அஹமது 66, அப்துர் ரெஹ்மான் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிஸ்பா உல் ஹக்கை வீழ்த்தியபோது டெஸ்ட் போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஹெராத். 57-வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.