ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 562 ரன்கள் குவித்தது. ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 448 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து பேட் செய்த வங்கதேச அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 92 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்தது.
முஸ்பிகுர் ரஹிம்55 ரன்களும், லிட்டன் தாஸ் 52 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை வங்கதேச அணி தொடர்ந்து விளையாடியது. லிட்டன்தாஸ் 56 ரன்கள் எடுத்த நிலையில் நசீம் ஷா பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ் உதவியுடன் அணியை முன்னெடுத்துச் சென்றார் முஷ்பிகுர் ரஹீம். அபாரமாக விளையாடிய அவர், 201 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் தனது 11-வது சதத்தை விளசினார்.மெஹிதி ஹசன் மிராஸ் அரை சதம் கடந்தார். இந்த ஜோடியின் அற்புதமான ஆட்டத்தால் வங்தேச அணி 137-வது ஓவரில் 448 ரன்களை கடந்து முன்னிலை பெறத் தொடங்கியது.
முஷ்பிகுர் ரஹீம் 341 பந்துகளில், ஒரு சிக்ஸர், 22 பவுண்டரிகளுடன் 191 ரன்கள் விளாசிய நிலையில் முகமது அலி பந்தில் விக்கெட் கீப்பர் ரிஸ்வானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்து அசத்தியது.
தொடர்ந்து மெஹிதி ஹசன் 179 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த நிலையில் ஷாகீன் ஷா அப்ரிடி பந்தில் வெளியேறினார். இதன் பின்னர் ஹசன் மஹ்மூத் 0, ஷோரிபுல் இஸ்லாம் 22 ரன்களில் நடையை கட்ட வங்கதேச அணி 167.3 ஓவர்களில் 565 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்களையும் ஷாகீன் ஷா அப்ரிடி, குர்ராம் ஷாஸத், முகமது அலி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 117 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்தது.
சைம் அயூப் 1 ரன்னில் ஷோரிபுல் இஸ்லாம் பந்தில் ஆட்டமிழந்தார். அப்துல்லா ஷபிக் 12, கேப்டன் ஷான் மசூத் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.