ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் டெஸ்ட் மைதானத்தில் உள்ள யூனியன் அலுவலக கட்டிடம் மற்றும் வேறொரு இடத்தில் உள்ள அகாடமி கட்டிடம் ஆகியவற்றிற்கு தீ வைத்த மார்க் வெர்மியூலன் என்ற வீரர் தற்போது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2006ஆம் ஆண்ட் அவர் இரண்டு கட்டிடங்களுக்குத் தீ வைத்ததை கோர்ட் விசாரணையில் ஒப்புக் கொண்டார். ஆனால் அப்போது தான் மனநிலைபாதிக்கப்பட்டிருந்ததாக திறம்பட கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் வாதாட தண்டனையிலிருந்து தப்பினார் அவர்.
எனவே 2008ஆம் ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானபோது அவரை மனநிலை சரியில்லாதவர் என்பதை கோர்ட் ஏற்றுக் கொண்டது.
கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் பந்து தலையில் அடித்து தனக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டது என்ற வாதத்தை அவரது வழக்கறிஞர் திறம்பட நிரூபித்தார்.
அந்த மார்க் வெர்மியூலன் என்ற வீரர் தற்போது ஜிம்பாப்பே அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 35 வயதான மார்க் வெர்மியூலன் ஜிம்பாப்வே ஏ அணிக்காக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் எடுத்ததால் ஜிம்பாப்வே தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஜிம்பாப்வேயில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் பயணம் மேற்கொள்கின்றன.
வெர்மியூலன் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக 2004ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்காக ஆடினார். பிறகு 2009ஆம் ஆண்டு ஒருநாள் அணியில் இடம்பெற்றார்.
தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அந்தப் போட்டி வரும் சனிக்கிழமை தொடங்குகிறது.
பிறகு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே பங்கு பெறும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.