இந்தியாவில் பாட்மிண்டனில் ஒற்றையர் போட்டிக்கு இருப்பதை போன்ற அங்கீகாரம் இரட்டையர் போட்டிக்கு கிடைப்பதில்லை என்று இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா தெரிவித்துள்ளார்.
கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பாட்மிண்டன் இரட்டையர் பிரிவில் ஜூவாலா கட்டா – அஸ்வினி பொன்னப்பா ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது. முன்னதாக டெல்லியில் கடந்த முறை நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்திய ஜோடி தங்கம் வென்றிருந்தது. ஆனால் இந்தமுறை அதனைப் பெற தவறிவிட்டது. இந்நிலையில் இந்தியாவின் இரட்டையர் பிரிவு பாட்மிண்டனுக்கு போதிய அங்கீகாரம் இல்லை என்று ஜூவாலா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளது:
இந்தியாவில் இரட்டையர் பிரிவு பாட்மிண்டன் போட்டிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதில்லை. எனவே இளைஞர்கள் அதிக அளவில் இரட்டையர் போட்டிகளில் பங்கேற்பதில்லை. இப்போது இரட்டையர் பிரிவில் விளையாடி வருபவர்களுக்கும் அரசு போதிய அங்கீகாரம் அளிக்கவில்லை என்பதுதான் உண்மை.
ஒற்றையர் பிரிவில் விளையாடுபவர்களுக்கு 10 டாலர் கிடைத்தால், இரட்டையர் பிரிவில் பங்கேற்பவர்களுக்கு வெறும் 2 டாலர்தான் பரிசாகக் கிடைக்கிறது.
இது சர்வதேச அளவில் உள்ள நிலவரம். ஆனால் இந்தியாவில் இரட்டையர் பிரிவு பாட்மிண்டனின் நிலைமை இதைவிடவும் மோசமாக உள்ளது. நாங்கள் முக்கியமான போட்டிகளில் வெற்றி பெற்று நாடு திரும்பும்போது கூட அரசுத் தரப்பில் எங்களை வரவேற்க யாரும் வருவதில்லை.
அதே நேரத்தில் ஒற்றையர் பிரிவில் நாங்கள் பெற்ற அதே வெற்றியுடன் திரும்புவோருக்கு விமான நிலையத்திலேயே சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் இந்தியாவில் இரட்டையர் பிரிவில் யாருமே விளையாடாத நிலை ஏற்பட்டு விடும் என்றார் ஜூவாலா.
எதிர்காலத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் நீங்கள் விளையாட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாட எனக்கு விருப்பமில்லை. அதற்கு இந்தியாவில் சரியான ஜோடி இல்லை என்பதுதான் காரணம் என்று பதிலளித்தார்