விளையாட்டு

டெஸ்ட் வரலாறு படைத்த அயர்லாந்து ஆல்ரவுண்டர் கெவின் ஓ பிரையன்

செய்திப்பிரிவு

பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்று முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய அயர்லாந்து பாகிஸ்தானை கடுமையாக அச்சுறுத்தியது தோல்வி பயத்தை கொடுத்தது, குறிப்பாக பாலோ ஆன் ஆடிய பிறகு 160 ரன்கள் முன்னிலையை வைத்துக் கொண்டு 14/3 என்று பாகிஸ்தானை அச்சுறுத்தியது.

கடைசியில் பாகிஸ்தான் பாபர் ஆஸம் (59), இமாம் உல் ஹக் (74) ஆகியோரது ஆட்டத்தினால் பாகிஸ்தான் போராடி வென்றது, இடையில் பாபர் ஆஸமுக்கும், இமாம் உல் ஹக்கிற்கும் வாய்ப்புகள் தவறவிடப்பட்டன. இல்லையெனில் வரலாறு காணாத டெஸ்ட் தோல்வியை சந்தித்திருக்கும் பாகிஸ்தான்.

இந்தப் போட்டியில் ஆல்ரவுண்டர் கெவின் ஓ பிரையன்  அயர்லாந்தின் முதல் இன்னிங்ஸில் 40 ரன்களை எடுத்தார், பிறகு பாலோ ஆனில் 2வது இன்னிங்ஸில் அபாரமான 118 ரன்களை எடுத்து கனவு அறிமுகப்போட்டியை சாதித்தார்.

இதன் மூலம் அவருக்கு ஐசிசி தரவரிசையில் 440 புள்ளிகள் கிடைத்தன, இது வரலாற்றுச் சாதனையாகும் முதல் போட்டியை ஆடும் ஒரு விளிம்பு நிலை அணியிலிருந்து ஒரு வீரர் அறிமுகப் போட்டியிலேயே 440 புள்ளிகளை இதுவரை பெற்றதில்லை.

உலகின் முதல் டெஸ்ட் போட்டி 1877-ல் நடைபெற்ற போது சார்ல்ஸ் பேனர்மேன் 165 ரன்கள் எடுத்தது பிற்பாடு தரவரிசைப்புள்ளிகள் கணக்கீடு வந்த பிறகு அவருக்கு 447 புள்ளிகளைப் பெற்றுத்தந்தன.

ஆனால் வங்கதேச வீரர் அமினுல் இஸ்லாம் 2000-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான அறிமுகப் போட்டியில் 145 ரன்களை எடுத்த போது 432 தரவரிசைப்புள்ளிகளைப் பெற்றார், ஜிம்பாப்வே வீரர் டேவ் ஹட்டனும் இந்தியாவுக்கு எதிரான ஜிம்பாபவேயின் அறிமுகப் போட்டியில் 121 மற்றும் 41 நாட் அவுட் என்று ஸ்கோர் செய்து 431 தரவரிசைப்புள்ளிகளைப் பெற்றார். தற்போது உலகின் முதல் டெஸ்ட் போட்டியாளர் பேனர்மேனுக்குப் பிற்பாடு கொடுத்த ஐசிசி தரவரிசைப்புள்ளிகளை விடுத்தால் அயர்லாந்து வீரர் கெவின் ஓ’பிரையன் தான் 440 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று வரலாறு படைத்துள்ளார்.

இந்தக் கெவின் ஓ பிரையன் இந்திய ரசிகர்களுக்குப் பிரசித்தமானவர், 2011 உலகக்கோப்பையில் பெங்களூருவில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து அதிர்ச்சி வெற்றி பெற்றது, அதில் இந்தக் கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் சதம் விளாசி நம்ப முடியாத வெற்றியைப் பெற்றுத் தந்தார். இங்கிலாந்தின் 329 ரன்கள் இலக்கை 111/5 என்று சரிந்த பிறகு நம்ப முடியாத வெற்றியை தன் திகைப்பூட்டும் அதிரடி மூலம் அயர்லாந்துக்குப் பெற்றுத் தந்தார் கெவின்.

SCROLL FOR NEXT