பல்லேகலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் 214 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை தோல்வியை தழுவியது.
பல்லேகலேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 40, ஷுப்மன் கில் 34, சூர்யகுமார் யாதவ் 58 மற்றும் ரிஷப் பந்த் 49 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து இலங்கை அணி பேட் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குசல் மென்டிஸ் மற்றும் பதும் நிசாங்கா இணைந்து சிறப்பாக தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மென்டிஸ், 27 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். குசல் பெரேரா மற்றும் நிசாங்கா இணைந்து 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பதும் நிசாங்கா, 48 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். அப்போது இலங்கை அணி 14.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. அவரை அக்சர் படேல் அவுட் செய்தார். அதே ஓவரில் குசல் பெரேராவை அவர் வெளியேற்றினார்.
அதன் பின்னர் இலங்கை அணி சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. சரித் அசலங்கா, தசன் ஷனகா, கமிந்து மென்டிஸ், வனிந்து ஹசரங்கா, பதிரனா, தீக்ஷனா, தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் ஆட்டமிழந்தனர். 19.2 ஓவர்களில் 170 ரன்களுக்கு அந்த ஆல் அவுட் ஆனது. அதன் மூலம் இந்தியா 43 ரன்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தங்கள் பயணத்தை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் வெற்றியுடன் தொடங்கி உள்ளனர்.
இந்தியாவின் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அர்ஷ்தீப் மற்றும் அக்சர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் பிஷ்னோய் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.