நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்ட பிறகு 1900-ம் ஆண்டிலேயே வில்வித்தை விளையாட்டானது ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது. 1900, 1904, 1908, 1920-ம் ஆண்டுகளில் வில்வித்தை விளையாட்டு ஒலிம்பிக்கில் இடம்பெற்று இருந்தது. இதைத் தொடர்ந்து வில்வித்தையில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன.
அதன் பிறகு 1931-ல் உலக வில்வித்தை சம்மேளனம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1972-ல்தான் மீண்டும் ஒலிம்பிக் போட்டிக்கு வில்வித்தை விளையாட்டு திரும்பியது. அதன் பின்னர் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் வில்வித்தை விளையாட்டு தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது.
வில்வித்தையில் 1972 முதல் 1984-ம் ஆண்டு வரை தனிநபர் போட்டிகள் மட்டுமே நடைபெற்றன. 1988-ம் ஆண்டு முதல் அணிகள் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. 2020-ம் ஆண்டில் கலப்பு அணிப் பிரிவு விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தையில் இந்தியாவில் இருந்து 6 பேர் கலந்து கொள்கின்றனர். இதில் தலா 3 வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். அவர்களது செயல் திறன் குறித்த ஓர் அலசல்...
அங்கிதா பகத்: உலக வில்வித்தை வீராங்கனைகள் தரவரிசையில் 40-வது இடத்தில் இருக்கிறார் இந்திய வீராங்கனை அங்கிதா பகத். நடப்பாண்டு நடைபெற்ற போட்டிகளில் அவரது வெற்றி சதவீதம் 60-ஆக உள்ளது. முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார் அங்கிதா. நடப்பாண்டு போட்டிகளில் அவர் இதுவரை எந்த ஒரு பதக்கத்தையும் கைப்பற்றவில்லை. ஒலிம்பிக் போட்டியில் தனது சிறப்பான செயல்திறனை அங்கிதா பகத் வெளிப்படுத்தும் பட்சத்தில் பதக்கம் கைகூடலாம்.
தீரஜ் பொம்மதேவரா: உலகத் தரவரிசையில் 12- வது இடத்தில் இருக்கும் தீரஜ் பொம்மதேவரா, 2019-ம் ஆண்டு முதலே சிறந்த முறையில் செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறார். தான் பங்கேற்ற போட்டிகளில் 81 சதவீத வெற்றிகளைக் குவித்து வந்துள்ளார். 22 வயதாகும் தீரஜ் இந்த ஆண்டில் 4 போட்டிகளில் பங்கேற்று 2-ல் பதக்கம் வென்றுள்ளார். பாக்தாத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை முதலாவது கட்டப் போட்டியில் தங்கம் வென்றார்.
அதைத் தொடர்ந்து ஷாங்காயில் நடைபெற்ற உலக வில்வித்தைக் கோப்பை முதலாவது கட்டப் போட்டியில் 9-வது இடத்தையும், யச்சியோனில் நடைபெற்ற உலக வில்வித்தைக் கோப்பை 2-வது கட்டப் போட்டியில் 17-வது இடத்தையும் பிடித்தார். அன்டால்யா நகரில் நடைபெற்ற உலக வில்வித்தை 3-வது கட்டப் போட்டியில் தங்கம் வென்று மீண்டும் ஃபார்முக்கு வந்தார்.
தீபிகா குமாரி: இந்திய வில்வித்தை வீராங்கனைகளில் மிகவும் நம்பிக்கைக்குரிய வீராங்கனையாக இருப்பவர் தீபிகா குமாரி. உலகத் தரவரிசையில் முன்பு முதலிடத்தில் இருந்தவர். பல்வேறு போட்டிகள், உலகக் கோப்பை விளையாட்டுகளில் இவர் அதிக அளவில் பதக்கங்களை வென்றிருந்தார். ஆனால் ஒலிம்பிக் போட்டியில் அவரால் பதக்கத்தை வெல்ல முடியவில்லை. 30 வயதாகும் தீபிகா குமாரி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கால் இறுதி வரை மட்டுமே முன்னேறினார்.
ஒலிம்பிக் போட்டிகளில் அவரது அதிகபட்ச சிறப்பான செயல்திறன் கால் இறுதி வரை முன்னேறியது மட்டும்தான். தற்போது உலகத் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் தீபிகா குமாரி, நடப்பாண்டு போட்டிகளில் 75 சதவீத வெற்றிகளைப் பெற்றுள்ளார். பாக்தாத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை முதலாவது கட்டப் போட்டியில் தங்கமும், உலகக் கோப்பை வில்வித்தை முதலாவது கட்டப் போட்டியில் வெள்ளியும் வென்றார் அவர். இம்முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறார்.
தருண்தீப் ராய்: நாட்டிலுள்ள மிகச் சிறந்த வில்வித்தை வீரர்களில் தருண்தீப் ராயும் ஒருவர். இதுவரை 3 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இருந்த போதிலும் பதக்கத்தை இவரால் வெல்ல முடியவில்லை. ஒலிம்பிக் போட்டிகளின் 2-வது சுற்றை இவரால் தாண்ட முடியவில்லை. உலகத் தரவரிசையில் 31-வது இடத்தில் இருக்கும் தருண்தீப், இந்த ஆண்டில் 64 சதவீத வெற்றிகளைக் குவித்துள்ளார். இந்த ஆண்டில் 4 போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர் ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஆசியக் கோப்பை முதலாவது கட்டப் போட்டியில்தான் அவர் பதக்கம் வென்றார்.
பஜன் கவுர்: 18 வயதான பஜன் கவுர், உலக வில்வித்தை வீராங்கனைகள் தரவரிசையில் 45-வது இடத்தில் இருக்கிறார். இந்தியாவுக்குப் பதக்கம் வென்று தரும் வீராங்கனைகள் வரிசையில் பஜன் கவுரும் உள்ளார். முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார் பஜன் கவுர். ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
பிரவீண் ஜாதவ்: உலகத் தரவரிசையில் 114-வது இடத்தில் பிரவீண் ஜாதவ், இதற்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றார். ஆனால் 2-வது சுற்றிலேயே வெளியேறினார். நடப்பாண்டில் அவர் பங்கேற்ற போட்டிகளில் பெரிய வெற்றிகளைப் பெறவில்லை. நடப்பாண்டு போட்டிகளில் அவருடைய வெற்றி சதவீதம் 43-ஆக மட்டுமே உள்ளது. இந்த ஆண்டில் நடைபெற்ற எந்த போட்டியிலும் அவர் பதக்கத்தை வெல்லவில்லை. அவரது ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜாம்பவான்கள்: வில்வித்தைப் போட்டியில் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் பெல்ஜியத்தின் ஹூபர்ட் வான் இன்னிஸ். இவர் 1900 முதல் 1920 வரை 6 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். அதன் பிறகு 1988, 1992, 2000-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற கொரிய வீரர் கிம் சூ-நியூங் 4 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.
அமெரிக்காவின் டேரல் பேஸ் என்ற வீரர் தனி நபர் பிரிவில் 2 முறை தங்கம் வென்று சாதனை படைத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 1976, 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் அவர் தங்கத்தைக் கைப்பற்றினார். வில்வித்தைப் போட்டியில் அதிக பதக்கங்களை வென்ற நாடாக கொரியா உள்ளது. அந்த அணி 23 தங்கம் உட்பட 39 பதக்கங்களைக் கைப்பற்றி அசைக்க முடியாத இடத்தில் உள்ளது.
சியோல் ஒலிம்பிக்கில் அறிமுகம்: ஒலிம்பிக் வரலாற்றில் வில்வித்தையில் இந்தியா முதன்முதலாக 1988-ம் ஆண்டு சியோலில் நடைபெற்ற போட்டியில்தான் பங்கேற்றது. ஆனால் இந்தியா இதுவரை வில்வித்தையில் ஒரு பதக்கத்தைக் கூட கைப்பற்றியதில்லை. 1988 முதல் 2020 வரை நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருந்த போதிலும் பதக்கக் கனவு இதுவரை கைகூடி வரவில்லை. 1988 ஒலிம்பிக்கில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினர். தனிநபர் பிரிவில் முதல் 20 இடங்களுக்குள் யாருமே வரவில்லை.
அதேபோல் அணிப் பிரிவிலும் இந்திய அணி ஏமாற்றத்தையே தந்தது. 2004-ம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய வீரர்சத்யதேவ் பிரசாத் தனி நபர் பிரிவில் 10-வது இடத்தைப் பிடித்தார். இதே ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை ரீனா குமாரி 15-வது இடத்தைப் பிடித்தார்.
இந்த ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் அணி 8-வது இடத்தையே கைப்பற்ற முடிந்தது. இதுதான் இந்திய அணியின் சார்பில் ஒலிம்பிக்கில் வில்வித்தையில் பெற்ற அதிகபட்ச இடமாகும். ஆனால் இம்முறை வில்வித்தைப் பிரிவில் முதல் முறையாக பதக்கத்தை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர், வீராங்கனைகள் பாரிஸுக்குப் பயணமாகியுள்ளனர்.
5 பிரிவு: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தையில் 5 பிரிவுகளில் போட்டிகள் அரங்கேறவுள்ளன. ஆடவர் தனிநபர், மகளிர் தனிநபர், ஆடவர் அணி, மகளிர் அணி, கலப்பு அணி என மொத்தம் 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.