ஹராரே: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியில் சஞ்சு சாம்சனின் அரைசதம் உதவியுடன் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.
ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி எதிர்பாராத விதமாக 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. எனினும் இதில் இருந்து மீண்டு அடுத்த 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்திய அணி பதிலடி கொடுத்தது. இதன் மூலம் தொடரில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளும் 5வது ஆட்டத்தில் தற்போது மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் ஓப்பனிங் செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசிய ஜெய்ஸ்வாலை சிகந்தர் ராசா அவுட் ஆக்கினார். அபிஷேக் சர்மா வந்த வேகத்தில் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடித்து 14 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.
ஷுப்மன் கில் 13 ரன்களில் ஆட்டமிழக்க, 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது தடுமாறியது இந்திய அணி. எனினும், ரியான் பராக்கும் சஞ்சு சாம்சனும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அணியை மீட்டெடுக்க முயன்றனர். ரியான் பராக் 22 ரன்கள், ஷிவம் துபே 26 ரன்கள், என விக்கெட்டானாலும் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். 58 ரன்களில் அவர் வீழ, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.
ஜிம்பாப்வே அணி தரப்பில் முஸ்ராபானி அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.