ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றது. ஜோஸ்பட்லரின் பேட்டிங், இலக்கை அமைக்கும் போது ராஜஸ்தான் பவுலர்கள் அதிரடி வீரர் தோனியைக் கட்டிப்போட்டது, சென்னை பவுலர்கள் எப்போதும் போல் திருப்திகரமாக வீசாதது என்று சென்னை தோல்விக்குப் பல காரணங்கள் உண்டு.
தனியார் கிரிக்கெட்தான் வீரர்களின் உணர்ச்சிகளை எப்படியெல்லாம் தட்டி எழுப்பிவிடுகிறது!! கேப்டன் கூல் நேற்று ஹாட் ஆகிவிட்டார்.
மீண்டும் ஒரு மோசமான 19வது ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியைச் சந்தித்தது. டேவிட் வில்லே அந்த ஓவரில்தான் 2 சிக்சர்களைக் கொடுத்தார். அவர் வீசிய லெந்த் சரியில்லை, இதைத்தான் தோனி ஆட்டம் முடிந்து சுட்டிக்காட்டினாரோ என்னவோ?
மீண்டும் சென்னை அணியின் பவுலர்கள் திருப்திகரமாக வீசவில்லை. தோனி அடிக்கடி கூறும் ‘டெத்’ ஓவர்கள்தான் நேற்றும் சென்னைக்கு ‘டெத்’ ஆக மாறியது.
ஆட்ட முடிந்து தோனி தன் அதிருப்தியை வெளிப்படுத்துகையில், “நாங்கள் ஒரு குறிப்பிட்ட லெந்த்தில் தான் வீசியிருக்க வேண்டும் அதுதான் திட்டமும் கூட. பவுலர்களிடம் தெளிவாக எப்படி வீச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதாவது பேக் ஆஃப் லெந்த் பந்துகளை வீசுமாறு அறிவுறுத்தினோம். ஆனால் அவர்களால் திட்டத்தை சரியாகச் செயல்படுத்த முடியவில்லை.
ஏனெனில் ஃபுல் லெந்த் பந்துகளில் நிறைய பவுண்டரிகள் கொடுத்தோம். 176 ஒரு சரிநிகருக்கும் கூடுதலான ரன் எண்ணிக்கைதான். பவுலர்கள்தான் எங்களைக் கைவிட்டனர். பீல்டிங்கில் இந்த லெவன் இவ்வளவுதான் சிறப்பாக செயலாற்ற முடியும்.
நாங்கள் வெறுமனே பிளே ஆஃபுக்கு தகுதி பெற ஆடவில்லை, வெற்றி பெற ஆடுகிறோம்” என்றார் தோனி.