நாங்கள் ராஷித்கானை விட்டுக் கொடுக்கவில்லை என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் நுழையும் இரண்டாவது அணிக்கான நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் சன் ரைசர்ஸ் 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
சன் ரைசர்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணி வீரர் ராஷித்கான் ( ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்) முக்கிய காரணமாக விளங்கினார். 10 பந்துகளில் ராஷித்கான் எடுத்த 34 ரன்கள்தான் சன் ரைசர்ஸ் அணியின் கவுரவமான இலக்கை எட்ட வழி செய்தது.
பேட்டிங்கில் மட்டுமல்லாமல் 3 விக்கெட்டுகள், இரண்டு கேட்சுகள், ஒரு ரன் என நேற்றைய போட்டியின் நாயகனாக ராஷித் வலம் வந்தார்.
ராஷித்கானின் நேற்றைய ஆட்டத்தைப் பாராட்டி சச்சின் டெண்டுல்கர் உட்பட பல கிரிக்கெட் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது கதாநாயகன் ராஷித்கானை நினைத்து ஆப்கன் முழு பெருமை கொள்கிறது. எங்கள் நாட்டு வீரர்கள் அவர்கள் திறமையைக் காட்ட தளம் அளித்துக் கொடுத்த இந்திய நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ராஷித் ஆப்கானிஸ்தானின் சிறந்தவற்றை நினைவுபடுத்துகிறார். அவர் கிரிக்கெட் உலகிற்கு சிறந்த சொத்தாக இருப்பார். நாங்கள் அவரை விட்டுக் கொடுக்கவில்லை" என்று பதிவிட்டு இருக்கிறார்.