ஜேமி சுமித் 
விளையாட்டு

மேற்கு இந்தியத் தீவுகள் உடனான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து 371 ரன் குவிப்பு

செய்திப்பிரிவு

லண்டன்: இங்கிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 41.4 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 40 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 15, ஹாரி புரூக் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 371 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

தனது 7-வது அரை சதத்தை கடந்த ஹாரி புரூக் 64 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் அல்சாரி ஜோசப் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 114 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்த நிலையிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 ரன்களிலும் குடகேஷ்மோதி பந்தில் போல்டானார்கள். கிறிஸ்வோக்ஸ் 23, கஸ் அட்கின்சன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் வெளியேறினர். ஷோயிப் பஷிர் (0) ரன் அவுட் ஆனார்.

தனது அறிமுக போட்டியிலேயே அரை சதம் விளாசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜேமி சுமித் 119 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி வீரராக ஜெய்டன் சீல்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்களையும் ஜேசன் ஹோல்டர், குடகேஷ் மோதி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதையடுத்து 250 ரன்கள் பின் தங்கிய நிலையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது இன்னிங்ஸில் பேட் செய்யத் தொடங்கியது.

SCROLL FOR NEXT