யூரோ கோப்பை அரையிறுதியில் ஸ்பெயின் அணி பிரான்சை 2-1 என்று வீழ்த்தி இறுதிக்குச் சென்றதன் பின்னால் ஹீரோவாக எழுச்சி பெற்றார் 16 வயது லாமைன் யமால். கால்பந்தாட்டத்தின் உலக ஜாம்பவனான லியோனல் மெஸ்ஸி கைக்குழந்தை ஒன்றை கைகளில் சுமந்தபடியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது.
மெஸ்ஸியின் கைகளில் தவழும் அந்தக் குழந்தை வேறு யாருமல்ல, இன்று அதிகாலை யூரோ 2024 அரையிறுதியில் பிரான்ஸை வீட்டுக்கு அனுப்பும் ஸ்பெயின் அணியின் பிரமாதமான சமன் கோலை அடித்த லாமைன் யமால் என்ற 16 வயது ஹீரோதான்.
மெஸ்ஸி கையில் எப்படி இன்றைய ஹீரோவான குழந்தை வடிவ லாமைன் யமால் என்றால், பார்சிலோனா கிளப்பில் எப்போதும் ஒரு சடங்கு உண்டு. காலண்டருக்காக வீரர்கள் குழந்தையுடன் போஸ் கொடுக்க வேண்டும். ஜோவான் மான்ஃபோர்ட் அப்போது எடுத்த புகைப்படத்தில் மெஸ்ஸி கையில் எதேச்சையாக தவழ்ந்தது இன்றைய நட்சத்திரம் லாமைன் யமால்தான். லாமைன், பிரான்ஸை வெளியேற்றிய அந்த சமன் கோலை அடித்த நிலையில் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றுள்ள சூழலில், இந்தப் புகைப்படம் இன்று வைரலாகியுள்ளது.
யார் இந்த லாமைன் யமால்? - ஒரு சுருக்கமான பின்னணி: கேட்டலோனியாவில் 2007-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி பிறந்தவர் லாமைன் யமால். மொராக்கோ தந்தைக்கும் ஈக்வட்டோகினியா தாய்க்கும் பிறந்தவர் யமால். இவருக்கு 7 வயதாக இருக்கும் போது இவரது குடும்பம் பார்சிலோனாவுக்குக் குடிபெயர்ந்தது. இவர் பார்சிலோனா இளையோர் கால்பந்து அகாடமியில் சேர்ந்தார். யமால் ஒரு முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது முழுப்பெயர் லாமைன் யமால் நஸ்ரவ்யி இபானா. 16 வயதிலேயே பார்சிலோனாவுக்கு ஆடிய இளம் வீரர் என்ற சாதனைக்கு உரியவர் யமால்.
ஸ்பெயின் யு-15, யு-16 அணிக்கு முதலில் ஆடினார். 2023 யூரோ யு-17 தொடரில் 4 கோல்களை அடித்தார். அதில் பிரான்ஸுக்கு எதிராக செமி பைனலில் நேற்று அடித்தது போல் அதே இடத்திலிருந்து அதே போல் கோல் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரான்ஸ் அன்று 3-1 என்று வெற்றி பெற்றது. நேற்று 2-1 என்று ஸ்பெயின் வெற்றி பெற்றது. இளம் வயதிலேயே பல சாதனைகளுக்கு உரியவராக திகழ்கிறார் யமால்.
இவர் பெரும்பாலும் இடது கால் ஆதிக்கம் கொண்ட வீரர் ஆவார். அசாத்தியமாக பந்தை எதிரணி வீரர்களிடம் இருந்து கடைந்தெடுத்துச் செல்பவர். இவரது தனிச்சிறப்பு என்னவெனில் சென்டர் பார்வர்ட், அட்டாக்கிங் மிட்ஃபீல்டர். அல்லது குறிப்பாக வலது ஓர விங்கர் என்று எந்த நிலையிலும் அசத்தக்கூடியவர். வெகுவேகமாக ஆடக்கூடியவர். மின்னல் வேகத்தில் எதிரணியினரின் தடுப்பு வீரர்களைக் கடந்து வளைந்த ஷாட்களை கோலுக்குள் தொலை தூரத்திலிருந்து அடிக்க கூடியவர்.
பிரான்ஸுக்கு எதிரான அந்த அற்புத கோல்: பிரான்ஸ் முதல் கோலை அடித்தவுடன் சற்றும் கலங்காது ஸ்பெயின் அதிவேகக் கால்பந்தாட்டத்தை ஆடியது. அப்போது 21வது நிமிடத்தில் பந்து ஸ்பானிய, பிரான்ஸ் வீரர்கள் இருவர் காலிலும் பட்டு யமாலிடம் வந்தது. இடது புறத்திலிருந்து அவர் விறுவிறுவென பிரான்ஸ் கோலுக்குள் நுழைய முயன்றார். ஆனால் கோலுக்கு அருகில் 25 அடியில் பிரான்ஸ் வீரர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். யமாலுக்கும் பிரான்ஸ் கோல் கீப்பர் மைக் மைக்னனுக்கும் இடையே 7 பிரான்ஸ் வீரர்கள் மறித்துக் கொண்டிருந்தனர். முதல் டச்சில் ஷாட் ஆடப்போகிறார் என்று பிரஞ்சுப் படை உஷாரானது.
ஆனால் பந்தை வலது புறம் விரட்டி கொண்டு சென்றார். உடனேயே 2 பிரான்ஸ் வீரர்கள் இவரை மறித்தனர். ஆனால் இவர் மறுபடியும் இடது புறம் நகர்ந்தார். அடுத்த நகர்வு கொஞ்சம் ஸ்பேஸ் கிடைத்தவுடன் தனது வழக்கமான இடது முன் பாதத்தில் இடி போல் ஒரு ஷாட்டை தூக்கி அடிக்க அனைத்து பிரெஞ்ச் வீரர்களும் கோல் கீப்பரும் அண்ணாந்து பார்க்க கோல் போஸ்ட்டைத் தடவிய படி கோலுக்குள் நுழைந்தது பந்து.
இந்த ஷாட்டை அடிக்கும் முன் இரண்டு பிரான்ஸ் வீரர்களுக்கு இடது, வலது, வலது இடது என்று போக்குக் காட்டியது அற்புதம். லாமைன் யமாலின் இந்த கோல் பல கால்பந்து யுகங்களுக்குப் பேசப்படும் என்று நிபுணர்கள் பலர் தெரிவித்துள்ளனர். 25 அடியிலிருந்து பிரான்ஸின் உலகின் சிறந்த கோல் கீப்பர் மைக்னன் வேடிக்கை பார்க்கும் வண்ணம் அடித்த ஷாட் திகைப்பூட்டும் ஷாட் ஆகும்.
அதுவும் அவரது இடது பாதத்திலிருந்து உயரே எழும்பி வளைந்து கோல் போஸ்ட்டை தடவி கோலுக்குள் சென்ற காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இந்தக் கோலின் பிரமையிலிருந்து மீள்வதற்குள் அடுத்த 5 நிமிடங்களில் யமாலின் ஒரு மின்னல்வேக ஆட்டம் பிரான்சின் உட்பகுதியில் கலவரத்தை ஏற்படுத்தியது. ஆனால் இது யமாலின் உதவியுடன் ஆல்மோவின் கோலாக, வெற்றி கோலாக அமைந்தது.
இளம் வயது சாதனை: 16 வயது 362 நாட்களே ஆன யமால், இளம் வயதில் யூரோ அரையிறுதி ஆடிய வீரர் என்ற சாதனைக்கு உரியவரானார். 1958 உலகக்கோப்பையில் இதே பிரான்சுக்கு எதிராக பிரேசிலிய கால்பந்து மேதை பீலே அரையிறுதியில் ஆடும்போது அவருக்கு 17 வயது 244 நாட்கள். அதேபோல் இளம் வயதில் யூரோ அரையிறுதியில் கோல் அடித்தவரும் யமால்தான், இவருக்கு முன்பு கிறிஸ்டியானோ ரொனால்டோ 19 வயது 245 நாட்களில் யூரோவில் கோல் அடித்து சாதனையை வைத்திருந்தார்.
இந்த வெற்றியோடு அரையிறுதி அல்லது இறுதியில் ஸ்பெயின் 5 முக்கியத் தொடர்களில் தோற்கடிக்கப்பட்டதே இல்லை என்ற சாதனையை வைத்துள்ளது. யூரோ கோப்பை அரையிறுதியில் லாமைன் யமால் என்னும் உலக நட்சத்திரம் உதயமானார் என்றால் அது மிகையானதல்ல.