பி.டி.உஷா | கோப்புப்படம் 
விளையாட்டு

மறக்குமா நெஞ்சம் | பி.டி.உஷாவின் ஒலிம்பிக் நினைவுகள்

செய்திப்பிரிவு

தான் பங்கேற்ற நான்கு ஒலிம்பிக் மற்றும் பயிற்சியாளர், மேற்பார்வையாளர் என தனது ஒலிம்பிக் களத்தில் நீண்ட நினைவுகள் இருப்பதாக சொல்கிறார் இந்தியாவின் பி.டி.உஷா. எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக அவர் பங்கேற்க உள்ளார்.

இந்த சூழலில் ஒலிம்பிக் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். எனது 1984 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் 400 மீட்டர் தடை தாண்டுதல் இறுதிப் போட்டி குறித்து மக்கள் இன்னும் பேசிக் கொண்டு இருப்பார்கள். அது எனக்கு சற்றே கசப்பும் இனிப்பும் கலந்த நினைவு தான். ஒரு விநாடிக்கும் குறைவான நேரம் காரணமாக வெண்கலம் வெல்லும் வாய்ப்பை நான் இழந்தேன்.

அது இந்திய தடகளத்தின் சிறந்த தருணங்களில் ஒன்றாக இருக்கலாம். ஏனெனில், அப்போது ஒலிம்பிக் பதக்கம் என்பது நமக்கு நீண்ட நெடுங் கனவாக இருந்தது. ஆனால், பதக்கம் வெல்லும் வாய்ப்பை நெருங்கி அதை இழந்த தவிப்பை நான் மட்டுமே அறிவேன்.

நான் பதக்கம் வெல்வேன் என உறுதியாக இருந்தேன். அந்த முறை ஹாக்கியில் இந்தியா ஏமாற்றம் தந்தது. அதனால் என் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. ஆனால், ஓட்டக் களத்துக்கு சென்றால் அது அனைத்தையும் நான் மறந்து விடுவேன். அந்த முறை 4x400 ரிலே இறுதியிலும் நாங்கள் பங்கேற்றோம்.

16 வயதில் முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை நான் பெற்றேன். அது மாஸ்கோவில் நடைபெற்றது. அதிலிருந்து ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இருப்பதை நான் உணர்வு ரீதியாக அனுபவித்து வருகிறேன். இந்திய உணவு சாப்பிட முடியாத அனுபவங்களும் உண்டு.

1984 ஒலிம்பிக்கில் நான் 400 மீட்ட தடை தாண்டுதல் இறுதிக்கு தகுதி பெற்றதும் வெளிநாட்டை சேர்ந்த பயிற்சியாளர் ஒருவர் வந்து என்னிடம் எனது ஸ்பிரிண்ட் ரகசியம் குறித்து கேட்டு இருந்தார். நான் மாங்காய் ஊறுகாய் என்றேன். உடனே அவரும் அதனை சாப்பிட்டு பார்த்தார். அதே ஒலிம்பிக்கில் அங்கிருந்த பிசியோதெரபிஸ்ட் ஒருவர் சைக்கிளை கொண்டு மேற்கொள்ளும் ஹைட்ரோதெர்பியை பரிந்துரை செய்தார். அதை நான் இரண்டு நாட்களில் மூட்டு பகுதியில் எனக்கு இருந்த வலி பறந்து போனது. அப்போது அது மாதிரியான பிசியோ வசதி இந்தியாவில் இல்லை.

இப்படி பல்வேறு ஒலிம்பிக்கில் நான் பங்கு கொண்டுள்ளதை எண்ணி பெருமை கொள்கிறேன். வீராங்கனை, பயிற்சியாளர், மேற்பார்வையாளர், இப்போது தலைவர் என எனது ஒலிம்பிக் பயணம் உள்ளது. இந்த முறை ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நம் நாட்டு வீரர்கள் சிறப்பாக தயாராக என்னால் முடிந்ததை செய்துள்ளேன். அந்த வகையில் டோக்கியோவை காட்டிலும் இந்த முறை இந்தியாவுக்கு இன்னும் சிறப்பானதாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார். ஆசிய போட்டிகள் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் உட்பட பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ளார்.

SCROLL FOR NEXT