விளையாட்டு

ரோஜர் கோப்பை: அரையிறுதியில் ரோஜர் ஃபெடரர்: முர்ரேவை வீழ்த்தினார் சோங்கா

செய்திப்பிரிவு

ரோஜர் கோப்பை டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர், சோங்கா உள்ளிட்டோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

இந்தப் போட்டி கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி தோல்வியளித்த பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்கா, காலிறுதியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை வீழ்த்தியிருக்கிறார்.

சர்வதேச தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் சோங்கா 7-6 (5), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் உலகின் 9-ம் நிலை வீரரான முர்ரேவை தோற்கடித்தார். கடந்த 6 ஆண்டுகளில் முர்ரேவுக்கு எதிராக சோங்கா பெற்ற முதல் வெற்றி இது. சுமார் 2 மணி நேரம், 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடுமையாகப் போராடிய முர்ரேவுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முர்ரே, அதன்பிறகு ஒரு போட்டியில்கூட பட்டம் வெல்ல வில்லை.

தோல்வி குறித்துப் பேசிய முர்ரே, “முக்கியமான போட்டியில் தோற்றிருப்பது ஏமாற்றமளிக்கிறது. விளையாடாமல் இடைவெளி எடுத்துக்கொண்டால், மீண்டும் விளையாட வரும்போது முடிந்த அளவுக்கு அதிக போட்டிகளில் விளையாட முயற்சிக்க வேண்டும். டென்னிஸில் நாளுக்கு நாள் ஏராளமான மாறுதல்கள் ஏற்படு கின்றன. இந்த காலிறுதியைப் பொறுத்தவரையில் என்னை எதிர்த்து விளையாடிய சோங்கா முன்னணி வீரர். அவர் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். அதனால் அவரை வீழ்த்துவது கடினமானது” என்றார்.

2009, 2010 ஆகிய ஆண்டுகளில் ரோஜர் கோப்பை போட்டியில் சாம்பியன் ஆன முர்ரே, இங்கு 27 போட்டிகளில் விளையாடி 21-ல் வெற்றி கண்டுள்ளார்.

வெற்றி குறித்துப் பேசிய சோங்கா, “ஒவ்வொரு நாளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டி ருக்கிறது. நான் பெரிய அளவில் வெற்றி பெறாததால் கடந்த சில மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன். அதற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது” என்றார்.

கடந்த 4 ரோஜர் கோப்பை போட்டிகளில் 3-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் சோங்கா, அடுத்ததாக பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை சந்திக்கிறார். டிமிட்ரோவ் 5-7, 7-5, 7-6 (8) என்ற செட் கணக்கில் தென் ஆப்பிரிக்காவின் ஆண்டர்சனை தோற்கடித்தார்.

ரோஜர் ஃபெடரர் வெற்றி

மற்றொரு காலிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரரைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

வெள்ளிக்கிழமை 33-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஃபெடரருக்கு இந்த வெற்றி பிறந்த நாள் பரிசாக அமைந்தது. இந்தப் போட்டியில் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வெல்லும் பட்சத்தில் இது அவருடைய 80-வது பட்டமாக அமையும்.

ஃபெடரர் தனது அரையிறுதியில் ஸ்பெயினின் ஃபெலிஸியானோ லோபஸை சந்திக்கிறார். லோபஸ் தனது காலிறுதியில் 6-4, 6-7 (5), 6-3 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை தோற்கடித்தார்.

ஃபெடரரின் பிறந்த நாளை யொட்டி மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய அவர், “இந்த வயதிலும் டென்னிஸ் விளையாடிக் கொண்டி ருப்பதால் எனது கனவு நனவாகி யிருக்கிறது. நான் டென்னிஸை நேசிக்கிறேன். டேவிட் ஃபெரர் போன்ற ஒரு வீரருடன் விளையாடும் போதும், வெற்றி பெறும்போதும் நகைச்சுவையான விஷயங்கள் நடைபெறும்” என்றார்.

வில்லியம்ஸ் சகோதரிகள் மோதல்

மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸும், வீனஸ் வில்லியம்ஸும் மோதவுள்ளனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் செரீனா வில்லியம்ஸ் 4-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியையும், வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் கார்லா சுரேஜையும் தோற்கடித்தனர்.

செரீனாவும், வீனஸும் இதுவரை 24 முறை மோதியுள் ளனர். அதில் செரீனா 14 முறை வெற்றி கண்டுள்ளார். அதுவும் கடைசியாக மோதிய 5 ஆட்டங் களிலும் செரீனாவே வெற்றி கண்டுள்ளார்.

மற்றொரு காலிறு தியில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் பெலாரஸின் விக்டோரியா அசரென்காவை தோற்கடித்து அரையிறுதியை உறுதி செய்தார். அக்னீஸ்கா தனது அரையிறுதியில் ரஷ்யாவின் எக்டெரினா மகரோவாவை சந்திக் கிறார். மகரோவா 6-1, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கோகோ வென்டேவேஜைத் தோற்கடித்தார்.

அரையிறுதியில் சானியா-காரா ஜோடி

ரோஜர் கோப்பை டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் காலிறுதியில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ரகேல் காப்ஸ்-அபிகெய்ல் ஜோடியைத் தோற்கடித்தது. சானியா ஜோடி தங்களின் அரையிறுதியில் சீன தைபேவின் சூ வெய்-சீனாவின் ஷுவாய் பெங் ஜோடியை சந்திக்கிறது.

SCROLL FOR NEXT