ரொனால்டோ 
விளையாட்டு

இதுவே எனது கடைசி யூரோ தொடர்: கிறிஸ்டியானோ ரொனால்டோ

செய்திப்பிரிவு

பெர்லின்: நடப்பு யூரோ கோப்பை தொடர் தான் தனது கடைசி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடர் என நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். ஸ்லோவேனியா அணியுடனான ஆட்டத்துக்கு பிறகு அவர் இதனை உறுதி செய்தார்.

“இதுவே எனது கடைசி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடர். அதில் துளியும் சந்தேகம் இல்லை. கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வம் எனக்குள் அப்படியே உள்ளது. எனது ஆதரவாளர்கள், குடும்பத்தினரை கண்டு நான் உற்சாகம் கொள்கிறேன். எனது செயல்பாட்டின் பிரதான நோக்கமே அனைவரையும் மகிழ்விப்பது தான்” என அவர் தெரிவித்தார்.

39 வயதான ரொனால்டோ கடந்த 2003-ம் ஆண்டு முதல் போர்ச்சுகல் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 211 ஆட்டங்களில் ஆடி 130 கோல்களை பதிவு செய்துள்ளார். பல்வேறு கிளப் அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார். தற்போது அல்-நாசர் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2004 முதல் யூரோ கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். இதில் அதிக கோல்களை பதிவு செய்த வீரராக உள்ளார்.

நடப்பு யூரோ கோப்பை தொடரில் ஸ்லோவேனியா அணிக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் கோல் பதிவு செய்தார். இதே போட்டியில் பெனால்டி கிக் வாய்ப்பை மிஸ் செய்திருந்தார் ரொனால்டோ. இதன் காரணமாக அவர் களத்தில் கண்கலங்கினார். அதன் பிறகே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

SCROLL FOR NEXT