இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு திங்கள்கிழமை புறப்பட்டது. இதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் கூறியது:
இந்திய அணியில் நான் உள்பட 3 பேர் மட்டுமே இதற்கு முன்பு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். மற்ற வீராங்கனைகள் யாரும் டெஸ்ட் போட்டியில் விளையாடியது இல்லை.
இப்போது இங்கிலாந்துக்கு சென்று அந்நாட்டு அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறோம். இது மிகவும் சவாலான டெஸ்ட் தொடர். இதில் நாங்கள் வென்றால் அது மிகப்பெரிய சாதனையாகவே இருக்கும். எனவே வெற்றிக்காக முழு மூச்சுடன் பாடுபடுவோம். அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீராங்கனைகள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இதற்கு முன்பு 2012-ல் இங்கிலாந்துக்கு சென்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடினோம். அப்போது முதல் இரு ஆட்டங்களில் வென்று 2-0 என்ற முன்னிலையைப் பெற்றோம். எனினும் அடுத்த 3 ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் தொடரை வெல்ல முடியாமல் போனது என்றார் மிதாலி ராஜ்.