விளையாட்டு

கோலிக்கு கேப்டன் தோனியின் பரிசு

செய்திப்பிரிவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிக்கான ரன்னை எடுக்கும் வாய்ப்பை கேப்டன் தோனி தனக்கு பரிசாக அளித்ததாக விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஆட்டத்தில் 19-வது ஓவரின் கடைசி பந்தை தோனி எதிர்கொண்டார். அப்போது ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா இருந்தது. இருபது ஓவர் போட்டிகளில் வெற்றிக்கான ரன்னை எடுக்கும் வாய்ப்பு அதிக அளவில் தோனிக்கே கிடைப்பது வழக்கம். அவரும் சிக்ஸர் அடித்து வெற்றி இலக்கை எட்டுவார். அதேபோல இந்த ஆட்டத்திலும் வெற்றிக்கான ரன்னை எடுக்கும் வாய்ப்பு தோனிக்கு கிடைத்தது. ஆனால் 19-வது ஓவரின் கடைசி பந்தை தடுத்து விளையாடிய தோனி ரன் ஏதும் எடுக்கவில்லை.

இதன் மூலம் 20-வது ஓவரின் முதல் பந்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு மறுமுனையில் இருந்த கோலிக்கு கிடைத்தது. அவரும் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். வெற்றிக்கான ரன்னை எடுக்கும் வாய்ப்பை கோலிக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் தோனி விளையாடியது அனைவருக்குமே தெரிந்தது.

போட்டி முடிவுக்குப் பின் இது தொடர்பாக கோலி கூறியது: வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டபோது அந்த பந்தை தோனி எதிர்கொண்டார். நீங்களே வெற்றிக்கான ரன்னை எடுத்து போட்டியை முடித்து விடுங்கள் என்று நான் அவரிடம் கூறினேன்.

அதற்கு, இந்த போட்டியில் நீங்கள்தான் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து வந்தீர்கள். எனவே வெற்றிக்கான ரன்னை அடிக்கும் வாய்ப்பை எனது பரிசாக உங்களுக்கே அளிக்கிறேன் என்று தோனி என்னிடம் கூறினார்.

நானும் அதனை ஏற்றுக் கொண்டு அவருக்கு நன்றி கூறினேன். எப்போதுமே வெற்றிக்கான ரன்னை எடுப்பது சிறப்பான அனுபவம்தான். அந்த வாய்ப்பை எனக்கு தோனி வழங்கியது மகிழ்ச்சியளித்தது என்றார் கோலி.

SCROLL FOR NEXT