உலகக் கோப்பையுடன் திராவிட் 
விளையாட்டு

‘சக் தே திராவிட்’ - கேப்டனாக தோல்வி, பயிற்சியாளராக வெற்றி!

செய்திப்பிரிவு

பார்படாஸ்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் திராவிட் வெளியேறுகிறார்.

கடந்த 2007-ம் ஆண்டு இதே மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, முதல் சுற்றோடு வெளியேறியது. இந்திய அணியின் மகத்தான வீரர்களில் ஒருவராக அவர் அறையப்படுகிறார். இருந்தாலும் அவரால் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை.

2012-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் பயிற்சி சார்ந்து அவரது செயல்பாடு இருந்தது. ஐபிஎல் கிரிக்கெட் அணி ஆலோசகர் மற்றும் இந்திய அண்டர் 19 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். 2018-ல் அவரது பயிற்சியின் கீழ் இந்திய இளையோர் அணி உலகக் கோப்பையை வென்றது. தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

அதையடுத்து கடந்த 2021 நவம்பரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அவரது பயிற்சியின் கீழ் 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடி இருந்தது.

இந்த சூழலில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து இந்த தொடருடன் விலக உள்ளதாக தெரிவித்தார். அவருக்காக இந்திய வீரர்கள் கோப்பை வெல்ல வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்திருந்தார்.

அது போலவே ரோகித் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஒரு பயிற்சியாளராக இதில் ராகுல் திராவிடின் பங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதே மேற்கு இந்திய தீவுகளில் அன்று உலகக் கோப்பையை வெல்ல முடியாதவர் இன்று வென்றுள்ளார்.

SCROLL FOR NEXT