காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் யோகேஷ்வர் தத், பபிதா குமாரி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
ஆடவர் 65 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் 4-0 என்ற கணக்கில் கனடாவின் ஜெவோன் பால்பரை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே தனது வழக்கமான பாணியில் எதிராளிகளின் கால்களைப் பிடித்து வளைத்து நிலைகுலையச் செய்தார் தத்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 4-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் அலெக்ஸ் கிளாட்கோவை வீழ்த்திய யோகேஷ்வர் தத், பின்னர் நடைபெற்ற காலிறுதியில் மற்றொரு ஸ்காட்லாந்து வீரரான கேரத் ஜோன்ஸை எளிதாக தோற்கடித்தார். ஜோன்ஸின் தலையைப் பிடித்து தரையில் அழுத்தி அவரை நிலைகுலையச் செய்தார் தத்.
அரையிறுதியில் இலங்கை வீரர் சமரா பெரேராவை எதிர்கொண்டார் தத். சமரா, ஓரளவு தத்தின் ஆட்டத்தைப் பற்றி தெரிந்து வைத்திருந்ததால், அவரின் காலை தத் பிடித்தபோது முதலில் அதிலிருந்து நழுவினார். ஆனால் அடுத்த முறை அவரால் தப்ப முடியாமல் போகவே யோகேஷ் தத் 5-0 என்ற கணக்கில் வெற்றி கண்டார்.
மகளிர் 55 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பபிதா குமாரி தங்கப் பதக்கம் வென்றார். இவர் தனது இறுதிச்சுற்றில் 3-1 என்ற கணக்கில் கனடாவின் பிரிட்டானி லெவர்டியூரைத் தோற்கடித்தார்.