கயானா: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக பேட் செய்தனர்.
மழை அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தப் போட்டி கயானாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். கோலி 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 4 ரன்களில் வெளியேறினார். 8 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சுமார் 60 நிமிடங்களுக்கு பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
ரோகித் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோகித், 39 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ரஷித் சுழலில் போல்ட் ஆனார். 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார். அவர் ஆரச்சர் வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா பேட் செய்தனர். ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை விளாசிய ஹர்திக், 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை 18-வது ஓவரின் நான்காவது பந்தில் ஜார்டன் வெளியேற்றினார். அடுத்த பந்தில் டக் அவுட் ஆனார் ஷிவம் துபே. அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்தார் அக்சர் படேல். இதனால் கிறிஸ் ஜார்டன், ஹாட்ரிக் கைப்பற்றும் வாய்ப்பை இழந்தார்.
19-வது ஓவரில் 12 ரன்கள் எடுத்தது இந்தியா. ஆர்ச்சர் வீசிய அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார் ஜடேஜா. ஜார்டன் வீசிய கடைசி ஓவரில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 17, அக்சர் 10 ரன்கள் எடுத்தனர். இந்தப் போட்டியில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டுகிறது.
கயானா ஆடுகளத்தில் பந்துகள் மிகவும் தாழ்வாக எழும்பி (Low Bounce) வருகிறது. அதே நேரத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தங்களது பந்து வீச்சில் வேகத்தை கூட்டாமல் ஸ்லோவாக வீசி இருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. இதில் வெற்றி பெறும் அணி தென் ஆப்பிரிக்காவுடன் இறுதிப் போட்டியில் விளையாடும்.