விளையாட்டு

மழையால் ஆட்டம் நிறுத்தம்: 8 ஓவர்களில் இந்தியா 65 ரன்கள் குவிப்பு | T20 WC

செய்திப்பிரிவு

கயானா: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. 8 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. இந்த சூழலில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகளின் கயானாவில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.

9 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து கோலி ஆட்டமிழந்தார். இன்னிங்ஸின் 2-வது ஓவரில் அவரை ரீஸ் டாப்லி போல்ட் செய்தார். ரிஷப் பந்த் 4 ரன்களில் சாம் கரன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பவர் பிளே ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் பேட் செய்ய களத்துக்கு வந்தார்.

மறுமுனையில் கேப்டன் ரோகித் சர்மா 26 பந்துகளில் 37 ரன்கள் எடுத்துள்ளார். 6 பவுண்டரிகள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். 8 ஓவர்கள் முடிவில் இந்தியா 65 ரன்கள் எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

வானிலை நிலவரம்: போட்டி நடைபெறும் கயானா சர்வதேச மைதானம் ஜார்ஜ்டவுனின் புறநகர் பகுதியில் டெமராரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கயானாவில் கடந்த சில நாட்களாவே மழை பெய்து வருகிறது. நேற்று இந்திய அணி வீரர்களின் பயிற்சி மழையால் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

இன்றும் 90 சதவீத மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், போட்டி ரத்தாக அதிக வாய்ப்புள்ளது. அப்படி ஒருவேளை ரத்தானால் சூப்பர் 8 சுற்றில் குரூப் 1-ல் முதலிடம் பிடித்தற்காக இந்திய அணி நேரடியாக பைனலுக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

SCROLL FOR NEXT