செயின்ட் லூசியா: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 205 ரன்களைச் சேர்த்துள்ளது.
செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி நேஷனல் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனராக களமிறங்கிய விராட் கோலி 2வது ஓவரில் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி வெளியேறினார்.
மறுபுறம் இருந்த ரோகித், ஆஸ்திரேலியாவின் பந்துகளை அடித்து துவம்சம் செய்தார். சிக்சர்களாக விளாசியதில் 19 ரன்னில் அரைசதம் கடந்து அசத்தினார். அதுவும் மிட்செல் ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் மட்டும் 29 ரன்களை குவித்து மிரட்டினார்.
உடனிருந்த ரிஷப் பந்து 15 ரன்களில் விக்கெட்டானார். 9 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 102 ரன்களைச் சேர்த்திருந்தது. அசுரத்தனத்தை குறைக்காமல் தொடர்ந்து விளாசிக்கொண்டிருந்த ரோகித் 41 பந்துகளில் 92 ரன்களில் அவுட்டானது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. 8 சிக்சர்களை விளாசியிருந்தார். டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் அதிகபட்ச ரன்களை குவித்தார் சுரேஷ் ரெய்னா. 2010-ம் ஆண்டு நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 101 ரன்களை குவித்திருந்தார் ரெய்னா. அவருக்குப் பிறகு 92 ரன்களுடன் 2-ம் இடத்தில் உள்ளார் ரோகித்.
அடுத்து கைகோத்த சூர்யகுமார் யாதவ் - ஷிவம் துபே பொறுப்பாக ஆடினர். 15ஆவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 31 ரன்களில் பெவிலியன் திரும்பினார். களம் புகுந்த ஹர்திக் பாண்டியா - துபேவுடன் கைகோத்தார். 19ஆவது ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசி அதிரடி காட்டினார் ஹர்திக் பாண்டியா.
ஆனால், துபே நிலைக்கவில்லை. 28 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 205 ரன்களை குவித்தது. ஹர்திக் பாண்டியா 27 ரன்களிலும், ஜடேஜா 9 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலியா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹேசல்வுட் 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.