ஆன்டிகுவா: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 196 ரன்களைச் சேர்த்துள்ளது.
ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரோகித் சர்மா - விராட்கோலி ஓப்பனர்களாக களமிறங்கினர். ரோகித்சர்மா 4ஆவது ஓவரில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
3 சிக்சர்களை விளாசி 37 ரன்களைச் சேர்த்த விராட் கோலி, தன்சிம் ஹசன் வீசிய 9ஆவது ஓவரில் போல்டானார். வந்த வேகத்தில் சிக்சரை விளாசிய சூர்யகுமார் யாதவ் 6 ரன்களில் அதே ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 83 ரன்களைச் சேர்த்திருந்தது.
பொறுப்பாக ஆடிய ரிஷப் பந்து 34 ரன்னில் விக்கெட்டானார். ஷிவம் துபே - ஹர்திக் பாண்டியா இணை பாட்னர்ஷிப் அமைத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 34 ரன்களைச் சேர்த்த ஷிவம் துபே 18ஆவது ஓவரில் போல்டானார்.
ஹர்திக் பாண்டியா பொறுப்பாக ஆடி கடைசி ஓவரில் பவுண்டரி விளாசி அரைசதத்தை நிறைவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 196 ரன்களைச் சேர்த்தது. அக்சர் படேல் 3 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
வங்கதேச அணி தரப்பில் தன்சிம் ஹசன், ரிஷாத் உசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹசன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.